Friday, January 31, 2014

சரவண பவன் சாம்பார்.

இணைய தளம் ஒன்றில், இந்த சாம்பார் செய்முறை படித்தேன் .செய்தும்  பார்த்தேன். அற்புதமான ருசியில் இருந்தது. அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 சுவையான  சாம்பார்(சரவண  பவன்)  செய்வது எளிது . எப்படி செய்வது என்று பார்ப்போம்.







இட்லி, தோசை, பொங்கல் போன்ற டிபனிற்கு  தொட்டுக் கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள்.அபார  ருசி. இந்த ருசியில் டிபன் , டேபிளில் இருந்த இடம் தெரியாமல் காலியாகும்.


நீங்கள் பாசத்துடனும், அன்புடனும் சாம்பாரை பரிமாறும் போது , கண்டிப்பாக கூடுதல்  ருசி கிடைக்கும் . நம்புங்கள். 

Tuesday, January 21, 2014

தக்காளி ஊறுகாய்

தக்காளி ஜுஸ், ரசம்  என்பது நாம் சாதரணமாக  செய்வது. தக்காளி சீசனில் கிடைக்கும் போது  வாங்கி ஊறுகாய் செய்து வைக்கலாம். அதிக நாட்கள் இருக்கும்.




தக்காளி ஊறுகாய்  செய்யத் தேவையானவை.:

தக்காளி  பெரிதாக 4 அல்லது 5.
(கொஞ்சம் கெட்டியாக இருக்கட்டும். ரொம்பவும் பழுத்ததாக இருந்தால் ஊறுகாய் அவ்வளவு நன்றாக இருக்காது.) 

புளி  ஒரு உருண்டை.
உப்பு  ருசிக்கேற்ப.
மிளகாய் தூள்  இரண்டு சின்ன கிண்ணம்.
நல்லெண்ணெய்   5 டீஸ்பூன் 
கடுகு   2 டீஸ்பூன் .
கடலைபருப்பு  2 டீஸ்பூன் .

செய்முறை:

தக்காளியை நன்கு அலம்பி ,பின் நன்றாகத் துடைத்து  சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.கோது நீக்கிய, புளியை ஒரு கிண்ணத்தில் போட்டு, அதன் மேல் இந்த நறுக்கிய தக்காளியைப் போட்டு மூடி வைக்கவும். படத்தில்  காட்டியது போல் நறுக்கிய தக்காளிகளை வைக்கவும். அப்பொழுது தான்  தக்காளி சாற்றில் புளி  ஊறும்.ஒரு மணி நேரத்திற்கு ஊறட்டும்.








உப்பு  படத்தில் காட்டியுள்ள  அளவு. 
ஒரு கைப்பிடியளவு போட்டிருக்கிறேன்.



மிளகாய் பொடி  படத்தில் இருக்கும் கிண்ணத்தில்  இரண்டு கிண்ணம்எடுத்துக் கொண்டேன். நீங்கள் உங்கள் ருசிக்கேற்ப  எடுத்துக் கொள்ளலாம்.                                                                



 ஒரு மணி நேரம் ஊறட்டும். பின்பு , தக்காளி, புளி  ,உப்பு எல்லாவற்றையும்  மிக்சியில் போட்டு  நன்றாக அரைக்கவும். நன்கு நைசாக இருக்கட்டும். கண்டிப்பாக  தண்ணீர் சேர்க்காமல் தான் அரைக்க வேண்டும்.
 நன்றாகவே அரைபடும்.

விழுதாக வருவதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு மிளகாய் பொடியைப் போட்டு கரண்டியால் நன்கு கிளறவும்.

ருசி பார்க்கவும். உப்பு , மிளகாய் பொடி, புளி  இதில் .எது இன்னும் கொஞ்சம் போட்டால் ருசி  நன்றாக  இருக்கும்  என்று  உங்களுக்குத்  தோன்றுகிறதோ  ,
திரும்பவும் கொஞ்சம் சேர்த்து  போட்டு மிக்சியில்  அரைக்கலாம். 

அடுப்பில் வாணலியை வைத்து, நல்லெண்ணெயை ஊற்றவும்.எண்ணெய்  சூடானதும், கடுகு போட்டு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்  பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு அரைத்த விழுதை  சேர்க்கவும். அடுப்பை  சிம்மில் வைத்து இரண்டு, மூன்று  நிமிடங்கள் வரை கிளறிக் கொண்டு இருக்கவும். பிறகு  அடுப்பை நிறுத்தி விடவும். 




தக்காளி ஊறுகாய்  ரெடி.

கூடுதல் சுவைக்கு:  முருங்கைக்காயை சாம்பாருக்கு நறுக்குவது போல் நறுக்கி , அப்படியே பச்சையாக , தக்காளி ஊறுகாயில்(அடுப்பிலிருந்து இறக்கிய பிறகு) போட்டு  விடவும். கரண்டியால் கலக்கவும். தக்காளி ஊறுகாய் சுவை + முருங்கைக்காயின் ருசி அபாரமாக இருக்கும்.

ஆறிய பின் ஊறுகாயை  கண்ணாடி பாட்டிலில்  வைக்கவும்.
தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம். சப்பாத்திக்குக் கூட  நன்றாக இருக்கும். 

ஊறுகாயை  கண்ணாடி பாட்டிலிலேயே  வைக்கவும். 
பிளாஸ்டிக்  பாட்டில்  உபயோகிக்க  வேண்டாமே . ! ப்ளீஸ் .......

Saturday, January 11, 2014

பாகற்காய் பிட்லே

பாகற்காய்  கசக்கும் ,எல்லோருக்கும் தெரியும். அதை கொஞ்சம் இனிப்பு கலந்து  செய்து கொடுப்போமே. எல்லோருக்கும் பிடிக்கும் பாருங்கள்.



தேவையானவை

பாகற்காய்  -- கால் கிலோ.
புளி ஒரு நெல்லிக்காயளவு.
மஞ்சள் பொடி. கால் ஸ்பூன் .
சாம்பார் பொடி  உங்கள் ருசிக்கேற்ப .
தேங்காய்  2 டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப .
வெல்லம் சிறிதளவு (இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன்  உடைத்த  வெல்லம்)
வறுக்க, தாளிக்க  சிறிதளவு எண்ணெய்.
தாளிக்க கடுகு.
கறிவேப்பிலை,கொத்தமல்லி  சிறிது.


வறுத்து அரைக்க :

பெருங்காயம் சிறிது.
தனியா இரண்டு டீஸ்பூன்
கடலை பருப்பு   இரண்டு டி ஸ்பூன்.
ப.அரிசி   இரண்டு டீஸ்பூன் .
சிவப்பு மிளகாய்  இரண்டு அல்லது மூன்று .

செய்முறை

பாகற்காயை  சிறிய துண்டுகளாக  நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு டீஸ்பூன்  எண்ணயை  வானலியில் ஊற்றி  , எண்ணெய்   காய்ந்ததும், பெருங்காயம் , போட்டு வறுத்து எடுக்கவும் . பின் அரிசி, கடலைபருப்பு, தனியா ,மிளகாய்  எல்லாவற்றையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஆறின பிறகு மிக்சியில் போட்டு தேங்காயையும் சேர்த்து , கொஞ்சமாய்  தண்ணீர் விட்டு  ,விழுதாக  அரைத்து வைக்கவும்.விழுதை ரொம்பவும் நைசாக அரைக்க வேண்டாம். ரொம்பவும் நைசாக அரைத்து விட்டால்  , பிட்ல 'கொழ கொழ 'என்றாகி விடும். கவனம் . முக்கால் வாசி அரைபட்டால் போதும் . அதற்காக ரொம்பவும் கொரகொரப்பாகவும் அரைக்க வேண்டாம்.

புளியை  தண்ணீரில் ஊற  வைக்கவும்.

வாணலியில் எண்ணெய்  ஊற்றிக்  காய்ந்தவுடன், கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள பாகற்காய் இரண்டையும் போட்டு  சிறிது நேரம் வதக்கவும். இரண்டு நிமிடங்கள் பிறகு   ஊற  வைத்த புளியைக் கரைத்து , பாகற்காயில் ஊற்றவும். புளி  கரைசல் சற்றே நீர்க்க இருத்தல் நலம்.
இப்பொழுது மஞ்சள் பொடி, மிளகாய் பொடி உப்பு எல்லாம் போடவும். சாம்பார் பொடி போடும் போது, நீங்கள் அரைத்து வைத்திருப்பதில் மிளகாயும் சேர்ந்திருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும். கொதி வந்தவுடன் சிம்மில் வைத்து மூடி விடவும். சிறிது நேரம் கழித்து பாகற்காய் வெந்தவுடன்,
அரைத்து வைத்த விழுதை ,  அதில் சேர்க்கவும்.. ஒரு கொதி வந்தவுடன்  ,
வெல்லத்தைப் போட்டு  கரைந்தவுடன் இறக்கி வைக்கவும்.
ருசி பார்க்கவும். வெல்லம், காரம் ,உப்பு  வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.அரைத்த விழுதைப் போட்டு அதிக நேரம் கொதித்தால் கொத்சு போல் ஆகிவிடும்.
கொத்தமல்லி தூவி  ,சுடசுட பரிமாறுங்கள். சாதத்தில் போட்டும் பிசைந்து சாப்பிடலாம்.
பரிமாறும் போது  அன்பையும், பாசத்தையும்  அளவில்லாமல் போட்டுப் பரிமாறுங்கள். ருசி  தூக்கலாக இருக்க நான் கியாரண்டி.

Tuesday, January 7, 2014

தக்காளி தோசை.



நான்  நெட்டில் உலா வரும் போது  திருமதி  கீதா  சாம்பசிவம் அவர்களின்  இந்த தோசைக் குறிப்பை படிக்க நேர்ந்தது. சிற்சில மாற்றங்களுடன்  முயற்சித்துப் பார்க்கலாமே  என்று  தோன்ற  மறு நாளே செய்தேன். நன்றாகவே வந்தது.

அதை  இங்கே  உங்களுடன் பகிர்கிறேன்.

தேவையானவை ;

பச்சரிசி  ----1 கப்

இட்லி அரிசி(புழுங்கலரிசி)--1 கப்.

உளுத்தம் பருப்பு --அரை கப்.

துவரம் பருப்பு -----அரை கப்.

தக்காளி------மூன்று அல்லது நான்கு.

பச்சை மிளகாய் -----3

இஞ்சி  ஒரு சின்ன துண்டு.

உப்பு ருசிக்கேற்ப

எண்ணெய் ---- தோசை வார்ப்பதற்கு.

அரிசி பருப்பு வகைகளை  சுமார் நான்கு மணி நேரம் ஊற  வைத்து  மிக்சியிலோ. கிரைண்டரிலோ   அரைக்கவும். பாதி அரைபடும் பொது , இஞ்சி, மிளகாய்,  தக்காளி( தோல் நீக்கியோ, நீக்காமலோ).  தக்காளி தோல் நீக்க ,தக்காளியை ஒரு சில நிமிடங்கள் வெந்நீரில் போட்டு வைத்து , பின்பு உரித்தால் தோல் உரிந்து வந்து விடும் .நான் அப்படியே போட்டு அரைத்தேன். பல்லில் தக்காளித் தோல் அகப்படுமோ என்று நினைத்தேன். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.  நம் சிறுநீரகங்களுக்கும்  நல்லது ஆச்சு .  நல்ல நைசாக அரைத்த பின்பு  , உப்புப் போட்டு ,கலந்து விட்டு உடனேயே தோசையாக  வார்த்து விடுங்கள்.  அருமையாக இருக்கும்.

நான்-ஸ்டிக்(Non-Stick)  தோசைக்கல் வேண்டாமே!
 நம் பழைய இரும்புத் தோசைக் கல்லிலேயே   தோசை  ஊற்றி  குடும்பத்தினரின் ஆரோக்கியம்  காப்போம்.

இந்தத்  தோசை செய்வதற்கு  தூண்டுகோலாய்  அமைந்த  திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு என் நன்றி.

பட  உதவி---கூகுல் 

Thursday, January 2, 2014

வெங்காயப் பொடி.

















வெங்காயப்  பொடி செய்வதற்குத் தேவையானவை

1. சின்ன வெங்காயம்  ஒரு கைப்பிடி.

2. துவரம்பருப்பு  ஒரு  ஆழாக்கு .(வெங்காயத்தை விடவும், பருப்பின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் பொடி நன்றாக இருக்கும் .)

3. சிவப்பு  மிளகாய்  உங்கள் ருசிக்கேற்ப.

4. பெருங்காயம் சிறிது.

உப்பு தேவைக்கேற்ப
ஒரு ஸ்பூன்  எண்ணெய் .

வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும்.பருப்பு, மிளகாய், பெருங்காயம் எல்லாவற்றையும் சூடான  எண்ணெயில்  வறுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை லேசாக  வதக்கவும். இரண்டு  நிமிடங்கள் வதக்கினால் போதும் . ரொம்பவும்  வெங்காயம் வதங்கி விட்டால் , வெங்காயப் பொடி ,பொடியாக இல்லாமல் , துவையலைப் போல் ஆகிவிடும். அது மட்டுமல்லாமல்  ருசியும் மாறிவிடக்கூடும் .

மிக்சியில் முதலில், பெருங்காயம், பருப்பு, மிளகாய்,உப்பு எல்லாவற்றையும் போட்டு , நன்றாகப் பொடி செய்து கொள்ளவும். பின்பு (லேசாக ) வதக்கின வெங்காயத்தைப் போட்டு  நாற்பது அல்லது நாற்பத்திஐந்து செகண்ட்ஸ்  மட்டுமே   சுற்றவும்.  (ரொம்ப நேரம்  மிக்சியில் வெங்காயம் போட்டு  சுற்றினால் ,மீண்டும் சொல்கிறேன், வெங்காயம்  துவையலாகி விடும் அபாயம்  உண்டு.)



பின் தட்டில் கொட்டி கைகளால் லேசாக உதிர்த்துக் கொள்ளவும்.

கண்ணாடி பாட்டிலில் வைக்கவும். பல  நாட்கள் நன்றாகவே இருக்கும்.
ஃ பிரிட்ஜில் வைத்தும்  சாப்பிடலாம். வேண்டும் போது சூடான சாதத்தில், சிறிது நல்லெண்ணெய் விட்டு ,வெங்காயப் பொடிபோட்டு பிசைந்து  சாப்பிடுங்கள் .
ஒரு பிடி  அதிகமாகவே சாப்பிட்டு விடுவீர்கள்  பாருங்களேன் !
உங்களுக்குப் பிடித்திருந்தால் சொல்லுங்களேன்!