Saturday, March 21, 2015

புட்டு

புட்டு  தமிழ் நாட்டின் பாரம்பர்ய  உணவு வகைகளில் ஒன்று . புட்டு என்றதும் பரமசிவனார் , வந்தியின்   பிட்டுக்கு மண் சுமந்த  கதை   நினைவில்  வந்து மோதுகிறது. . பிட்டுக்கு மண் சுமந்தக் கதையை  வேறொரு தளத்தில் எழுதுகிறேனே. இப்பொழுது புட்டு செய்முறையை சொல்கிறேன்.
அது புட்டு இல்லை பிட்டு  என்று சிலர் சொல்வது காதில் விழுகிறது.
புட்டு / பிட்டு எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள். அதன் செய்முறை இதோ .

அதற்குத் தேவையானவை :
  1. வறுத்த அரிசிமாவு/ இடியப்ப மாவு.--2 கப்
  2. வெல்லம் --அரை கிலோ ( உங்கள் ருசிக்கேற்ப கூட்டவோ  குறைக்கவோ செய்யலாம் )
  3. துருவியத் தேங்காய் ----1கப்.
  4. ஏலக்காய்--சிறிது.
  5. முந்திரி----சிறிது.
  6. நெய் -----இரண்டு ஸ்பூன் 




செய்முறை:
முதலில் வெல்லப் பாகு வைத்துக் கொள்வோம். வெல்லத்தை  உடைத்து  ஒரு பாத்திரத்தில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க  வைக்கவும். வெல்லம் கரைந்த பிறகு  கல், மண் நீக்க  வடிகட்டிக் கொள்ளவும். பிறகு திரும்பவும்  அடுப்பில் வெல்லப் பாகை வைத்து, துருவிய தேங்காயைப் போட்டு கொதிக்க வைக்கவும். வெல்லப்பாகு நன்கு கெட்டியாக  வரும் வரை அடுப்பில் இருக்கட்டும்.  வெல்லப் பாகை சிறிது எடுத்துக் கைகளால் உருட்டி தண்ணீரில் போட்டால் கரையாமல்  உருண்டு வரும். அது தான் சரியான பதம்.  ஏலக்காய் பொடி செய்துப் போட்டு இறக்கி வைத்துக் கொள்ளவும். பாகு அதிகமாய் இருந்தால் கவலைப் பட வேண்டாம். புட்டுக்கு வேண்டுமென்பதை உபயோகப்படுத்திக் கொண்டு மிச்சத்தை நாள் பட வைத்துக் கொண்டு  உப்யோகபடுத்திக் கொள்ளலாம். கெட்டிப் பாகாக இருப்பதால் கெட்டுப் போகாது.

 நான் இடியாப்ப மாவைக் கொண்டு புட்டு செய்திருக்கிறேன்.மாவை அகலமானப்  பாத்திரத்தில் போடவும்
தண்ணீரில் உப்பைக் கலந்து  சற்று கைப் பொறுக்கும் வரை  சூடு  செய்து கொள்ளவும்.  உப்புக் கலந்த வென்னீரை மாவில் கொட்டி, பொல பொல வெனப் பிசைந்து மூடி வைக்கவும். அரை மணி கழித்து  வெந்நீர் விட்டுப் பிசறிய மாவை  இட்லிப் பானையில் வைத்து  வேக வைக்கவும். பின்பு எடுத்து தட்டில் கொட்டி  ஆறிய பின் கட்டி இல்லாமல்  கையால் உதிர்த்துக் கொள்ளவும்.


 வெல்லப் பாகை எடுத்து  மாவில் கொட்டி  கலக்கவும். உங்கள் சுவைக்கேற்ப வெல்லப் பாகை சேர்த்துக் கொள்ளுங்கள். நெய்யை வாணலியில் விட்டு சூடு படுத்திக் கொள்ளவும். முந்திரி பருப்பை அதில் போட்டு சிவக்க வறுத்து, கலந்த புட்டில்  கொட்டவும்.

 விருப்பப்பட்டால் நெய் சேர்த்து  பரிமாறலாம்.

சுவையான புட்டுத் தயார்.