Sunday, October 11, 2015

வத்தக்குழம்பு சாதம்


வத்தக்  குழம்பு  சாதம் செய்யத் தேவையானவை :

வறுத்து அரைக்க 

மிளகாய் --7அல்லது 8 ( உங்கள் விருப்பத்திற்கேற்ப )
தனியா --2 ஸ்பூன்
மிளகு- அரை ஸ்பூன்
சீரகம் --அரை ஸ்பூன்
வெந்தயம் --சிறிது.
முந்திரிப்
பருப்பு --மூன்று அல்லது நான்கு .
பெருங்காயம்--சிறிது .
தேங்காய் துருவல் (விருப்பப்பட்டால்)-- 1 ஸ்பூன்
எண்ணெய் --சிறிது (வறுப்பதற்கு)

தாளிக்க 

கடுகு ------ ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு ----ஒரு ஸ்பூன்
துவரம்பருப்பு------- ஒரு ஸ்பூன்

 மற்றும்
கறிவேப்பிலை சிறிது.
புளி ஒரு சின்ன உருண்டை  தண்ணீரில்  ஊற  வைத்து , கரைத்து வைத்துக் கொள்ளவும்.
உப்புத் தேவையான அளவு.
மஞ்சள் தூள் சிறிது.
தாளிக்க  எண்ணெய் -- இரண்டு டீஸ்பூன்
 

Displaying IMG_1611.JPG
 
செய்முறை :

குக்கரில் வேண்டிய சாதத்தை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வறுத்து அரைக்க வேண்டியவற்றை வறுத்து  எடுத்து ஆற வைக்கவும். பின்பு மிக்சியில் போட்டு சிறிதுத் தண்ணீர்  விட்டு  நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு வாணலியில்  எண்ணெய்  ஊற்றி , சூடானவுடன் , கடுகு  தாளித்து, அது பொரிய ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு , துவரம் பருப்பு போடவும் . பருப்பு  சிவக்க ஆரம்பித்ததும், கரைத்து வைத்திருக்கும் புளியை அதில் ஊற்றி  கொதிக்க வைக்கவும்.புளிக்  கரைசல் ரொம்பவும் கெட்டியாக இருக்க வேண்டாம். சற்று நீர்க்க இருந்தால் தான் புளி  பச்சை வாசனைப் போக கொதிக்க சரியாக இருக்கும். வேண்டிய உப்பு சேர்க்கவும்.

 (கேன்சருக்கு எதிரியான )மஞ்சள் தூள்  சேர்க்க மறக்க வேண்டாம்.

புளியின்  பச்சை வாசனைப் போனவுடன் , நைசாக அரைத்து வைத்திருக்கும் விழுதைப்   போட்டு சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். முந்திரிப் பருப்பு சேர்த்திருப்பதால்  சட்டென்று  கெட்டியாகி விடும். சற்றுக் கெட்டியானவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.

சாதத்தை ஒரு பாத்திரத்தில் கொட்டி சிறிது நெய் ஊற்றி வத்தக் குழம்பை  ஊற்றி  கரண்டியால் நன்கு கலந்து விடவும். சாதம் உதிர் உதிராக இருந்தாலும் நன்றாக இருக்கும், சற்றே குழைந்த சாதம் என்றாலும்  சுவையாய் இருக்கும்.

துவரம்பருப்புப்   போட்டுத் தாளிப்பதால் சாப்பிடும்போது கூடுதல்  சுவை கிடைக்கும்.

சூடாக  பரிமாறவும். உங்கள் அன்பை  அளவில்லாமல் கலந்து பரிமாறுங்கள். சுவை தூக்கலாகத் தெரியும் என்பதில் சந்தேகமேயில்லை.

இந்த ரெசிபியை  டிவி நிகழ்ச்சி ஒன்றில் பார்த்து விட்டு , செய்து பார்த்தேன் .
அதற்குக் கிடைத்த வரவேற்பு , என்னை அடிக்கடி செய்ய வைக்கிறது.


                                        Displaying IMG_1609.JPG

நீங்களும் முயன்று பாருங்களேன்.
வத்தக் குழம்பு  சாதத்திற்கு உங்கள் வீட்டில்  எப்படி வரவேற்பு என்பதைப் பற்றி தெரிவிக்க மறக்க வேண்டாம். 

1 comment:

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்