Showing posts with label பருப்பு. Show all posts
Showing posts with label பருப்பு. Show all posts

Monday, March 5, 2018

பருப்புப் பாயசம்!

பாசிப் பருப்புப்  பாயசம் செய்ய பாசிப்பருப்பு, வெல்லம், ஏலக்காய்  மட்டும் இருந்தாலே போதுமானது.

உங்கள் குழந்தைகளின் வளர்ச்சியின்   பொறுப்பை  இந்தப் பாயசம் எடுத்துக் கொள்ளும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்
நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையென்றால் , கூகுளில் ,  பாசிப்பருப்பு, வெல்லம்  இரண்டிலும் இருக்கும் ப்ரோட்டீன் , மற்றும் இரும்பு சத்து அளவைப் பார்த்தால்  அசந்து தான் போவீர்கள்.

பிறகு எதற்குக் காத்திருப்பு? செய்து உங்கள் குழந்தைகளுக்குக் கொடுத்துப்  பாருங்கள்........



"அம்மா நான் வளர்ந்து விட்டேனே ! " என்று சொல்வார்கள் பாருங்களேன்.

Monday, April 17, 2017

பருப்புத் துவையலுக்கு எது இணை?

உலகம் சுற்றும் வாலிபனான  என் மகன் எப்பொழுது தரையிறங்கினாலும், அவன்  விருபப்பட்டுக் கேட்பது பருப்புத் துவையலும், வத்தக் குழம்பும் தான்.     
'' உலகில்  பல இடங்களில் சாப்பிட்டிருக்கிறேன்.என்ன தான் வெண்ணெயும், க்ரீமுமே கொட்டி கொட்டி செய்தாலும்,  அவையெல்லாம் நம்   பருப்புதுவையலிற்கும், வத்தக் குழம்பிற்கும் ஈடாகுமா ?" என்று அங்கலாய்ப்பான்.

உங்களுக்கும் 'பருப்புத்துவையல்,வத்தக்குழம்பு 'ஜோடியைப் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும்.

நான் செய்யும் வத்தக்குழம்பு செய்முறை பார்க்க  இங்கே ' க்ளிக்' செய்யவும் .

பருப்புத் துவையல் எப்படி செய்வது என்று கீழிருக்கும்  வீடியோவில் சொல்கிறேன்.



           உங்களின் மேலான கருத்துக்கள் என்னை மேம்படுத்த உதவும்.
                                                           நன்றி! நன்றி!


Saturday, January 11, 2014

பாகற்காய் பிட்லே

பாகற்காய்  கசக்கும் ,எல்லோருக்கும் தெரியும். அதை கொஞ்சம் இனிப்பு கலந்து  செய்து கொடுப்போமே. எல்லோருக்கும் பிடிக்கும் பாருங்கள்.



தேவையானவை

பாகற்காய்  -- கால் கிலோ.
புளி ஒரு நெல்லிக்காயளவு.
மஞ்சள் பொடி. கால் ஸ்பூன் .
சாம்பார் பொடி  உங்கள் ருசிக்கேற்ப .
தேங்காய்  2 டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப .
வெல்லம் சிறிதளவு (இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன்  உடைத்த  வெல்லம்)
வறுக்க, தாளிக்க  சிறிதளவு எண்ணெய்.
தாளிக்க கடுகு.
கறிவேப்பிலை,கொத்தமல்லி  சிறிது.


வறுத்து அரைக்க :

பெருங்காயம் சிறிது.
தனியா இரண்டு டீஸ்பூன்
கடலை பருப்பு   இரண்டு டி ஸ்பூன்.
ப.அரிசி   இரண்டு டீஸ்பூன் .
சிவப்பு மிளகாய்  இரண்டு அல்லது மூன்று .

செய்முறை

பாகற்காயை  சிறிய துண்டுகளாக  நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு டீஸ்பூன்  எண்ணயை  வானலியில் ஊற்றி  , எண்ணெய்   காய்ந்ததும், பெருங்காயம் , போட்டு வறுத்து எடுக்கவும் . பின் அரிசி, கடலைபருப்பு, தனியா ,மிளகாய்  எல்லாவற்றையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஆறின பிறகு மிக்சியில் போட்டு தேங்காயையும் சேர்த்து , கொஞ்சமாய்  தண்ணீர் விட்டு  ,விழுதாக  அரைத்து வைக்கவும்.விழுதை ரொம்பவும் நைசாக அரைக்க வேண்டாம். ரொம்பவும் நைசாக அரைத்து விட்டால்  , பிட்ல 'கொழ கொழ 'என்றாகி விடும். கவனம் . முக்கால் வாசி அரைபட்டால் போதும் . அதற்காக ரொம்பவும் கொரகொரப்பாகவும் அரைக்க வேண்டாம்.

புளியை  தண்ணீரில் ஊற  வைக்கவும்.

வாணலியில் எண்ணெய்  ஊற்றிக்  காய்ந்தவுடன், கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள பாகற்காய் இரண்டையும் போட்டு  சிறிது நேரம் வதக்கவும். இரண்டு நிமிடங்கள் பிறகு   ஊற  வைத்த புளியைக் கரைத்து , பாகற்காயில் ஊற்றவும். புளி  கரைசல் சற்றே நீர்க்க இருத்தல் நலம்.
இப்பொழுது மஞ்சள் பொடி, மிளகாய் பொடி உப்பு எல்லாம் போடவும். சாம்பார் பொடி போடும் போது, நீங்கள் அரைத்து வைத்திருப்பதில் மிளகாயும் சேர்ந்திருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும். கொதி வந்தவுடன் சிம்மில் வைத்து மூடி விடவும். சிறிது நேரம் கழித்து பாகற்காய் வெந்தவுடன்,
அரைத்து வைத்த விழுதை ,  அதில் சேர்க்கவும்.. ஒரு கொதி வந்தவுடன்  ,
வெல்லத்தைப் போட்டு  கரைந்தவுடன் இறக்கி வைக்கவும்.
ருசி பார்க்கவும். வெல்லம், காரம் ,உப்பு  வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.அரைத்த விழுதைப் போட்டு அதிக நேரம் கொதித்தால் கொத்சு போல் ஆகிவிடும்.
கொத்தமல்லி தூவி  ,சுடசுட பரிமாறுங்கள். சாதத்தில் போட்டும் பிசைந்து சாப்பிடலாம்.
பரிமாறும் போது  அன்பையும், பாசத்தையும்  அளவில்லாமல் போட்டுப் பரிமாறுங்கள். ருசி  தூக்கலாக இருக்க நான் கியாரண்டி.