இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ள சட்னி சாம்பார் போரடித்து விட்டதா?
குடும்பத்தினர் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்களா? இந்த கார சார சட்னி செய்து பாருங்கள்.... உன்னைப் போல் உண்டா என்கிற புகழ்ச்சிக்கடலில் உங்களைத் தள்ளி திக்கு முக்காட செய்து விடுவார்கள் பாருங்களேன்.....
வெங்காய சட்னி, தோசைக்கு, இட்லிக்கு ஏன் சப்பாத்திக்குக் கூட தொட்டுக் கொள்ளலாம்.
எப்படி செய்யலாம் என்று பார்ப்போமா?
வெங்காயச் சட்னி செய்யத் தேவையானவை:
சாம்பார் வெங்காயம் ---5 அல்லது 6.
( சாம்பார் வெங்காயம் இல்லையெனில் பெரிய வெங்காயம் ஒன்று எடுத்துக் கொள்ளலாம்.)
சிவப்பு மிளகாய்--5 அல்லது 6
தக்காளிப் பழம்--- 2.
உப்பு--- தேவைக்கேற்ப
எண்ணெய்--1 ஸ்புன்.
கடுகு ---1/2 ஸ்பூன்
சட்னி செய்முறை :
வெங்காயம் உரித்து வைத்துக் கொள்ளவும். பெரிய
வெங்காயமாயிருந்தால் நான்காக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளியையும்
நான்காக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் , வாணலியில் எண்ணெய் ஊற்றி , சூடான பின், முதலில் சிவப்பு
மிளகாயைப் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு வெங்காயம், தக்காளியைப் போட்டு இரண்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும்.
(நன்கு வதக்கி விட வேண்டாம். சுவை மாறி விடும்.)
பிறகு வறுத்த மிளகாயை , உப்புடன் சேர்த்து மிக்சியில் போட்டு நன்கு
பொடியாக்கிக் கொள்ளவும். அதற்குப் பிறகு வதக்கின வெங்காயம்,
தக்காளியைப் போட்டு அரைக்கவும். (நான் மிகவும் நைசாக அரைப்பதில்லை).
கடுகு தாளிக்கவும்.
வெங்காய சட்னி ரெடி.
வதக்கின தக்காளிக்குப் பதிலாக புளியை அப்படியே உபயோகிக்கலாம்.