Tuesday, November 18, 2014

ஓட்ஸ் லட்டு !

ஓட்ஸின்  பயன்கள் நம் எல்லோருக்கும் தெரிந்ததே.  ஓட்ஸைக் கொண்டு ,, உப்புமா, கிச்சடி, கஞ்சி  எல்லாமே செய்து பார்த்திருக்கிறேன். அடை செய்யும் போது  கூட ஓட்ஸ் சேர்த்திருக்கிறேன்.
இன்று ஓட்சை வைத்து ரவா லட்டு மாதிரி , செய்து பார்த்ததில் மிக அருமையான  லட்டுகள் , பார்ப்பதற்கும், சுவைப்பதற்கும் கிடைத்தன. மிக மிக எளிதான இந்த லட்டு செய்து சுவைத்து தான் பாருங்களேன்.

ஓட்ஸ் லட்டு செய்யத் தேவையானவை:

  1. ஓட்ஸ்---1 கப்.
  2. சர்க்கரை--- 1/4 கப்.( ருசிக்கேற்ப )
  3. ஏலக்காய் --சிறிது.
  4. முந்திரிபருப்பு---சிறிது.
  5. நெய்----ஆறு ஸ்பூன் (சுமார்)

செய் முறை :

ஓட்ஸை  வெறும் வாணலியில் போட்டு நன்கு வறுக்க வேண்டும். ஓட்ஸ் வறுக்கும் போது  பிரவுன் கலராக மாறி வாசனை வரும் போது  , தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.
மிக்சியில், சர்க்கரை, ஏலக்காய் போட்டு, நன்கு நைசாக  பொடி செய்து கொள்ளவும்..பின்பு வறுத்த ஓட்ஸைப்  போட்டு அதையும் நன்கு பொடி .
செய்யவும் .ஓட்ஸ் பொடி,  சர்க்கரைப் பொடி இரண்டையும் கலந்துக் கொள்ளவும். வாயில் போட்டுப் பார்த்து , சர்க்கரை அதிகம் வேண்டுமானாலும்  சேர்த்துக்  கொள்ளலாம். சர்க்கரை அதிகம் என்று தோன்றினால் இன்னும் சிறிது ஓட்ஸை  வறுத்துப் பொடித்துப் போட்டு உங்கள் ருசிகேற்ப  கலந்து கொள்ளவும்.
பின்பு வாணலியை அடுப்பில் வைத்து சூடானவுடன், கொஞ்சம் நெய் விட்டு, முந்திரிப் பருப்பை உடைத்துப் போட்டு சிவந்ததும் , கலந்து வைத்த மாவில் கொட்டவும். மீதி இருக்கும் நெய்யை அடுப்பில் வைத்து நன்கு  சூடானதும்  மாவில்  கொட்டி நன்கு கலக்கவும். கை பொறுக்கும் சூட்டில்  கையால் உருண்டையாகப் பிடிக்கலாம்.
மிக மிக ருசியாக ரவா லட்டுப் போலவே சுவையாக இருக்கும். முயற்சி செய்து தான் பாருங்களேன்.




ஓட்ஸ் லட்டு எடுத்துக்  கொள்ளுங்கள்.