Tuesday, December 24, 2013

எண்ணெயில்லா எலுமிச்சை ஊறுகாய்

















இதற்குத் தேவையானது :

எலுமிச்சம் பழம்  10
சிவப்பு மிளகாய்   உங்கள்  ருசிக்கேற்ப
வெந்தயம்   இரண்டு  டீ ஸ்பூன் .
உப்பு  ருசிக்கேற்ப
மஞ்சள் தூள்  3 டீ ஸ்பூன் .
எண்ணெய் சிறிதளவு( மிளகாய், வெந்தயம் ,வறுக்க)

எலுமிச்சம் பழத்தை படத்தில் தெரிவது போல் நறுக்கிக் கொள்ளவும்.
நீங்கள் இன்னும் சிறிதாகவோ, கொஞ்சம் பெரிதாகவோ  விருப்பத்திற்கேற்ப
நறுக்கிக் கொள்ளலாம்.


ஒரு பாத்திரத்தில், இந்த எலுமிச்சை துண்டுகளில்  சிலவற்றை  இரண்டு விரல்களால் லேசாகப்  பிழிந்த மாதிரி போடவும். அப்பொழுது தான் நீங்கள் உப்பு போடும் போது , உப்பு சீக்கிரம்  கரையும்.


பிறகு உப்பும், மஞ்சள் தூளும் அதில் போட்டு, கரண்டியால் நன்கு  கலந்து விட்டு , அப்படியே மூடி வைக்கவும். தினம் ஒரு முறை பாத்திரத்தை நன்கு குலுக்கி விட்டு  மூடி வைக்கவும். இதே மாதிரி தினமும் குலுக்கி, ஒரு வாரத்திற்கு  வைத்திருக்கவும். வேண்டுமானால் வெயிலில் ஒரு சில மணி நேரம் வைக்கலாம். (ஆனால் கட்டாயமில்லை .)





ஒரு வாரம் கழித்து ,ஒரு ஸ்பூனால் அமுக்கிப் பார்த்தால் நன்கு அமுங்கும்.எலுமிச்சை  சாறு  தெரியும் .( மேலே  படத்தில் உள்ளது போல்)


இந்த சமயத்தில், வெந்தயம், மிளகாய்  இரண்டையும் எண்ணெயில் வறுத்து
மிக்சியில் பொடித்து வைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியை எலுமிச்சங்காய் மேல் தூவி  கரண்டியால் நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.



ருசித்துப் பார்த்து , தேவைப்பட்டால் உப்பும், இன்னும் கொஞ்சம் மிளகாய் தூளும் சேர்த்துக் கொள்ளலாம். உப்பு  கொஞ்சம் தூக்கலாக இருப்பது நலம். நாள் பட  உப்பின் சுவை தெரியாது. மேலும் உப்பு குறைவாக இருந்தால் ஊறுகாய் கெட்டு விடும் வாய்ப்புண்டு.





எலுமிச்சை ஊறுகாய்  ரெடி !!!

இதை கண்ணாடி பாட்டிலில் அல்லது பீங்கான் ஜாடியில்   எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

பிளாஸ்டிக்  பாட்டிலகளைத் தவிப்போமே!
புற்று  நோயை விரட்டுவோமே!

Wednesday, December 18, 2013

கொத்தமல்லி தொக்கு









கொத்தமல்லி  , சீசனில் சீப்பாக கிடைக்கும்போது  தொக்கு செய்து வைத்துக் கொண்டால் , பல நாட்கள் வரை கெடாமல்  இருக்கும்.

தொக்கு செய்யத்  தேவையான  பொருட்கள்:

கொத்தமல்லி  ஒரு சின்ன கட்டு.
உளுத்தம்பருப்பு  ஒரு கைப்பிடியளவு.
சிவப்பு மிளகாய்  உங்கள் ருசிக்கேற்ப
புளி  ஒரு சின்ன  ஆரஞ்சு  சைஸ்  அளவு .
உப்புத்  தேவையான அளவு.
பெருங்காயம்  சிறிது.
எண்ணெய் ஒரு டீ ஸ்பூன் .

கொத்தமல்லியை  தண்ணீரில் நன்கு  கிளீன் செய்து, நறுக்கி வைத்துக் கொள்ளவும் .


வாணலியில்  எண்ணெய்  சூடான பின்  ,  பெருங்காயம்  வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் உளுத்தம் பருப்பை  சிவக்க  வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மிளகாயையும் வறுக்கவும்

உப்பு, பெருங்காயம்,  வறுத்த உளுத்தம்பருப்பு  , மிளகாய் எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு  நன்கு  பொடியாக்கவும்.

ரொம்பவும் நைசாக  அரைக்க வேண்டாம். லேசாக  "நறநற"  என்று  இருக்கும் போது ,புளியை, மிக்சியில் போட்டு சுற்றவும். நன்கு கலந்து வந்ததும் , நறுக்கி வைத்த கொத்தமல்லியையும் ,போட்டு இரண்டு மூன்று  சுற்று சுற்றவும்.
நாம் உளுத்தம்பருப்பு  வறுத்து சேர்ப்பது   ரொம்பவும் "பிசுக்  'என்று ஒட்டாமல் இருப்பதற்காகத் தான்.



எடுத்து கண்ணாடி  பாட்டிலிலோ  அல்லது  எவர் சில்வர் டப்பாவிலோ   வைத்துக் கொள்ளுங்கள். மாசக் கணக்கிலிருக்கும். விருப்பப்பட்டால்
ஃ பிரிட்ஜிலும்  வைத்து உபயோகிக்கலாம்.

தயவு செய்து பிளாஸ்டிக் பாட்டிலிலோ, பிளாஸ்டிக் டப்பாவிலோ  வைக்க  வேண்டாமே!
ஆரோக்கியத்திற்கு நல்லதில்லை !

செய்து பார்த்து சொல்லுங்களேன்.

Saturday, December 7, 2013

தேங்குழல் செய்யலாம் வாங்க!



தேங்குழல் செய்யத் தேவையானவை:

பச்சரிசி  5 கப்
வெள்ளை உளுத்தம்பருப்பு   1 கப்
பெருங்காயம் சிறிதளவு.
ஜீரகம்  அல்லது எள் (கருப்பு /வெள்ளை)
வெண்ணெய்  50 கிராம் அளவு.
உப்புத்  தேவையான அளவு.

பொரிப்பதற்கு எண்ணெய் .

பச்சரிசி , உளுத்தம் பருப்பு  இரண்டையும் ஒன்றாகப்  போட்டு மெஷினில் அரைத்துக்  கொள்ளவும்.  நன்றாக நைசாக  இருக்கட்டும்.

மாவு அரைக்கும்  வசதி இல்லாத இடத்திலிருப்பவர்கள் 5 கப் அரிசி மாவும், ஒரு கப் உளுத்த மாவும்  ஒன்றாக கலந்து  செய்யலாம்.

மாவு சல்லடையில் அரைத்த மாவை ஒரு முறைக்கு இரு முறை  சலித்துக் கொள்ளவும்.அரிசி மாவும் உளுத்தமாவும் சரியாக கலக்கவில்லை என்றால்
எண்ணெயில்  பிழிந்தவுடன்  வெடிக்கும் அபாயம் உண்டு.

சலித்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு , தேவையான உப்பைப் போடவும். பெருங்காயம், ஜீரகம், வெண்ணெய்   போட்டு நன்கு கலந்து , கொஞ்சம் கொஞ்சமாக  தண்ணீர் விட்டுப் பிசையவும்.

அடுப்பில் ,எண்ணெய்  வைத்துக் காய்ந்ததும் , தேங்குழல்  அச்சில், மாவைப் போட்டு , எண்ணெயில் பிழியவும். பிழிந்தவுடன்  வரும் 'சல சல ' சத்தம்  சிறிது நேரத்தில் அடங்கி விடும். அந்த சமயத்தில்  தேங்குழலை  எடுத்து விட வேண்டும் .

எடுத்து தட்டில் வைத்து , வீட்டினருக்குக் கொடுத்து  அசத்தவும்.
எண்ணெய்  அதிகமாக  குடிக்காத முறுக்கு இது.  அதனால் தைரியமாக அவ்வப்போது செய்யலாம்.

செய்து சாப்பிட்டுப் பார்த்து எனக்கு  கருத்து சொல்லுங்கள்.


image courtesy----google.