Monday, December 29, 2014

வாழைக்காய் பொடி

வாழைக்காயை வைத்து, பஜ்ஜி , வறுவல் செய்திருப்பீர்கள் , கறி  செய்து இருப்பீர்கள், கூட்டு செய்து சாப்பிட்டிருப்பீர்கள் , குழம்பு கூட  செய்திருக்கலாம், ஏன் வாழைக்காய் சாம்பார் கூட செய்திருக்கலாம் தான்.
ஆனால்.......பொ.........டி..........
வாழைக்காய் பொடி   செய்து சாப்பிட்டிருக்கீறீர்களா?

இல்லையா ....

அப்படி என்றால் உங்களுக்குத் தான் இந்தப் பதிவு.

"அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்.நாங்கள் தான் செய்திருக்கிறோமே " என்று சொல்பவர்களா நீங்கள்  ? அப்படி என்றால் நான் சொல்லும் செய்முறை சரி தானா  என்று சொல்லுங்கள்.

வாழைக்காய் பொடி செய்யத் தேவையானவை :
  1. வாழைக்காய் -1 அல்லது 2 ( உங்கள் தேவைக்கேற்ப)
  2. உளுத்தம் பருப்பு -- 3 டீ  ஸ்பூன் 
  3. சிவப்பு மிளகாய் ---  2 ( உங்கள் காரத்திற்கேற்ப )
  4. உப்பு -----தேவைக்கேற்ப 
  5. பெருங்காயம் சிறிது.
  6. எண்ணெய்   1 டீ ஸ்புன் 



 செய்முறை :

முதலில் வாழைக்காயை  இரண்டாக படத்தில் உள்ளது போல் நறுக்கிக் கொள்ளவும். பின்பு   ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைக்காய்கள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைக்கவும். அதிகம் வெந்து விடக் கூடாது. ஒரு ஸ்பூன் நுனியால் மெதுவாக அமுக்கிப் பார்த்தால், ஸ்புன்  நுனி உள்ளே போகும். அது தான் சரியானப் பதம் அடுப்பில் இருந்து இறக்கி  தண்ணீரில் இருந்து எடுத்து ஆற வைக்கவும்.

ஆறியப்  பிறகு வாழைக்காய்களிளிருந்து தோலை உரித்து எடுத்து விடவும். கைகளால் லேசாக நசுக்கிக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்  ஊற்றி, பெருங்காயம், உளுத்தம் பருப்பு, மிளகாய்  எல்லாவற்றையும் போட்டு சிவக்க வறுக்கவும்.  ஆற வைக்கவும்.

மிக்சியில்  வறுத்த உளுத்தம்பருப்பு, மிளகாய், பெருங்காயம் , தேவையான உப்புப் போட்டு பொடி செய்துக் கொள்ளவும். நன்கு பொடியானதும், வேக வைத்து மசித்த வாழைக்காய்களை  மிக்சியில் போட்டு,  ஒரு சில வினாடிகள் மட்டுமே  whipper போட்டுக்  கொள்ளுங்கள் .

ஒரு ஸ்பூனால் நன்கு கலந்து பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட  சுவையோ சுவை தான்.சிறிது நல்லெண்ணெயுடன் பிசைந்து சாப்பிட சுவைக் கூடும்

சாப்பிட்டுப் பார்த்து சொல்லுங்கள்.





 பி.கு : இந்தப் பொடி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை :

வாழைக்காயை  அதிகம் வேக வைத்தாலோ, அல்லது மிக்சியில் மசித்த  வாழைக்காயைப் போட்டு அதிக வினாடிகள் சுற்றி விட்டாலோ  பொடியாக வராது. கூழாகி  விடும் .





Tuesday, November 18, 2014

ஓட்ஸ் லட்டு !

ஓட்ஸின்  பயன்கள் நம் எல்லோருக்கும் தெரிந்ததே.  ஓட்ஸைக் கொண்டு ,, உப்புமா, கிச்சடி, கஞ்சி  எல்லாமே செய்து பார்த்திருக்கிறேன். அடை செய்யும் போது  கூட ஓட்ஸ் சேர்த்திருக்கிறேன்.
இன்று ஓட்சை வைத்து ரவா லட்டு மாதிரி , செய்து பார்த்ததில் மிக அருமையான  லட்டுகள் , பார்ப்பதற்கும், சுவைப்பதற்கும் கிடைத்தன. மிக மிக எளிதான இந்த லட்டு செய்து சுவைத்து தான் பாருங்களேன்.




                                            ஓட்ஸ் லட்டு எடுத்துக்  கொள்ளுங்கள்.

Friday, October 17, 2014

கம்பு கிச்சடி

கம்பு  சிறு தானிய வகையை சேர்ந்தது. டையாபிடிக் நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற உணவு. கம்பு வேக வைப்பதற்கு சற்றே அதிக நேரம் ஆகும். ஆனால் சமைத்த பின் சுவையோ அலாதி தான்.






கம்பு ரவையாகக்  கிடைத்தால்   அதையே பயன் படுத்திக் கொள்ளலாம்.
கம்பு ரவையாகக் கிடைக்கவில்லை என்றால் நாமே ரவையாக்கிக் கொள்ளலாம்.  கம்பை நன்கு  தண்ணீரில் சுத்தம் செய்து விட்டு(ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை)  , மிக்சியில் போட்டு உடைத்துக் கொள்ளலாம். ரவையாகி விடும்.


கம்பு ரவை


 கம்பு கிச்சடி செய்யத் தேவையானவை:

  1. கம்பு ரவை ---1 கப் 
  2. உருளைக்கிழங்கு ( விருப்பப்பட்டால்) --  1 .
  3. கேரட்--1.
  4. பச்சைப் பட்டாணி --சிறிது.
  5. பெரிய வெங்காயம்---  1 அல்லது 2   
  6. தக்காளி---1.
  7. பச்சை மிளகாய்--1/2 ( விருப்பத்திற்கேற்ப)
  8. கடுகு -- 1 ஸ்புன் 
  9. உளுத்தம்பருப்பு --1 ஸ்புன்.
  10. எண்ணெய் --- 1 ஸ்புன்   (தாளிக்க) .
  11. உப்பு----தேவைக்கேற்ப 
  12. கறிவேப்பிலை-சிறிது.


செய்முறை :

வெங்காயம், பச்சைமிளகாய்,  தக்காளி, காய் வகைகள் எல்லாவற்றையும் அரிந்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய்  ஊற்றி, காய்ந்தது , கடுகு, உ.பருப்புப் போட்டு சிவந்ததும், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை , காய் போட்டு லேசாக வதக்கவும். பிறகு அதிலேயே கம்பு ரவையைப் போட்டு இரண்டு பிரட்டு பிரட்டவும். கம்பு வறுபட்டதும் வாசனை  வரும். கம்பின் பச்சை வாசனை  போய் விடும். அப்பொழுது கேசை நிறுத்தி விடலாம்.

வதக்கியதை பாத்திரத்தில் போட்டு,  மூன்றரைக் கப் தண்ணீர்   (ஒரு கப் கம்பிற்கு, மூன்று கப் தண்ணீரும், காய்கறிக்கு அரை கப்)  விடவும். உப்பு சேர்த்து கரண்டியால் கிளறி விட்டு, பாத்திரத்தைக் குக்கரில் வைத்து  ஐந்து அல்லது ஆறு விசில் வரும் வரை  வைத்திருந்து அடுப்பை அணைக்கவும்.

குக்கர் ஆறிய பின் எடுத்து கரண்டியால் நன்கு கலந்து விட்டு சூடாகப் பரிமாறவும். சட்னி/ சாம்பார்  தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.  தயிருடன் சாப்பிட சுவை கூடும் .







Tuesday, September 30, 2014

பிடிகருணைக் கிழங்கு மசியல்

பிடி கருணைக் கிழங்கு மசியல்  சாப்பிட சுவையாக இருக்கும். பிடி கருணைக்  கிழங்கு  , புது கிழங்காக இருந்தால் சில சமயம் , சமைக்கும் போதும்,சாப்பிடும் போதும், கையும் , வாயும் அரிக்கும். அதைத் தவிர்க்க  வாங்கி நான்கைந்து நாட்களுக்குப் பிறகே சமைக்க வேண்டும்.

கருணைக் கிழங்கு மசியல் செய்யத் தேவையானவை:




  1. கருணைக் கிழங்கு--2 அல்லது 3.
  2. பச்சை மிளகாய்----2 அல்லது 3 ( உங்கள் கார விருப்பத்திற்கேற்ப)
  3. எலுமிச்சம் பழம் --1.
  4. உப்பு---தேவைக்கேற்ப.
  5. சர்க்கரை ---1/2 ஸ்புன்
  6. தேங்காய் துருவல் விருப்பப்பட்டால்
  7. கறிவேப்பிலை சிறிது.
  8. கடுகு தாளிக்க .
  9. எண்ணெய் -தாளிக்க 1 ஸ்புன்

செய்முறை :

பச்சை மிளகாயை  தூளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பிடி கருணைக் கிழங்கை   குக்கரில் வேக வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு அல்லது மூன்று  விசில் வந்தால் போதும் . குக்கர் சத்தம் அடங்கிய பின் எடுத்துத் தோலை உரித்து  லேசாக மசித்துக் கொள்ளவும்.( ரொம்பவும் மசிக்க வேண்டாம்) .

அடுப்பில் வாணலியை வைத்து , எண்ணெய்  ஊற்றி சூடானதும், கடுகு போட்டுத் தாளிக்கவும்.. கடுகு வெடித்ததும், பச்சை மிளகாய், கறிவேப்பிலைத் தாளித்து, பின்பு  மசித்து வைத்தக் கிழங்கை போட்டு தேவைக்கேற்ப உப்புத் தூளைத்  தூவவும். சிறிது நேரம் பிரட்டிக் கொண்டிருக்கவும். இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள்  வதக்கினால் போதும். இறக்குவதற்கு முன்பு சர்க்கரைத் தூவி  சில வினாடிகள்  பிரட்டவும். பின்பு அடுப்பிலிருந்து இறக்கவும்.

இறக்கிய பின்பு. பாதி எலுமிச்சம்பழத்தைப் பிழியவும்.கரண்டியால் கலக்கவும்.ருசி பார்க்கவும். தேவைப்பட்டால்  மறு பாதி எலுமிச்சம் பழத்தையும் பிழியலாம். விருப்பப்பட்டால் தேங்காய துருவல் சேர்க்கலாம்.




மிக ருசியாக இருக்கும்.

Friday, September 19, 2014

தோசை மிளகாய் பொடி ( with Flax Seeds--ஆளி விதை )


Flax seeds  என்று அழைகப்படும்  ஆளி  விதை உடலிற்கு ஆரோக்கியப் பலன்கள் நிறைந்தது என்று பரவலாக பேசப்படுகிறது.  Omega3 fatty acids மற்றும் நார்சத்து நிறைந்து காணப்படும் இதை உபயோகித்து நாம் இட்லிக்குத் தொட்டுக் கொள்ளும் மிளகாய்  பொடி செய்யும் முறை பார்ப்போம்.

இதற்குத் தேவையானவை:


  1. சிவப்பு மிளகாய் --கைப்பிடியளவு (உங்கள் விருப்பத்திற்கேற்ப)
  2. உளுத்தம்பருப்பு --1 சின்ன டம்ளர்.
  3. Flax Seeds/ ஆளி  விதை -- 1/4 டம்ளர் .
  4. பெருங்காயம்---சிறிது.
  5. உப்பு  உங்கள் ருசிக்கேற்ப .
  6. எண்ணெய் --2 ஸ்புன் 


செய்முறை :


  



இட்லிக்கு / தோசைக்கு  மிளகாய் பொடி போட்டு நல்லெண்ணெய் விட்டுக் குழைத்து  சாப்பிடவும். சுவையோ சுவையாக இருக்கும். 


Monday, August 25, 2014

குதிரைவாலி பொங்கல். ( Barnyard Millet)

குதிரைவாலி  அரிசி ஒரு வகை சிறு தானியம். நம் அரிசியில் பொங்கல், உப்புமா செய்வது போல் ,  குதிரைவாலி பொங்கல் செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது. புரதம், நார் சத்து, விட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.குதிரைவாலிப் பொங்கல் செய்முறை பார்ப்போமா?




தேவையானவை  :

  1. குதிரைவாலி அரிசி -- 1 கப் 
  2. பாசி பருப்பு -----1/4 கப் 
  3. மிளகு ஒரு ஸ்புன் 
  4. சீரகம்  ஒரு ஸ்பூன் 
  5. முந்திரி  சிறிது.
  6. நெய் இரண்டு ஸ்பூன் 
  7. இஞ்சி ஒரு சிறிய துண்டு ( நறுக்கியது )
  8. கறிவேப்பிலை சிறிது.
  9. உப்பு  தேவைக்கேற்ப. 

செய்முறை:

பாசிபருப்பை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் குதிரைவாலி அரிசியைக்  களைந்து,  வறுத்த பாசிபருப்புடன் கலந்து  மூன்று  கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து  3 அல்லது 4 விசில்  வரும் வரை  வைத்து , பின்பு கேசை நிறுத்தி விடவும்.

குக்கர்  நன்கு ஆறியவுடன், திறந்து, வெந்த குதிரைவாலி அரிசி பருப்பு இரண்டையும் கரண்டியால் லேசாக மசிக்கவும். கெட்டியாக இருந்தால் வெந்நீர் ஊற்றி உங்களுக்கு வேண்டுமளவிற்குத் தளர்த்திக் கொள்ளலாம். தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்..பின்பு வாணலியை அடுப்பில் வைத்து நெய் விடவும், சூடானதும் , மிளகு, சீரகம், முந்திரி போட்டு சிவக்க வறுக்கவும். சிவந்ததும், இஞ்சி கறிவேப்பிலை சேர்த்து  பொங்கலில்  போடவும். மிகவும்  மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.

                                   




 தேங்காய் சட்னியுடன் பொங்கலை  சூடாகப் சாப்பிடவும்.


பி.கு. : குதிரைவாலி  அரிசி வெந்ததும்  அளவில் நிறைய ஆகிவிடும்.அதனால்
முதல் முறை செய்யும் போது சற்று கவனமாக  அளவைக் குறைத்துப்  போட்டுக் கொள்ளவும். அதே போல்  கொஞ்சம் சாப்பிட்டாலே  திருப்தியாக இருக்கும் . வெகு நேரத்திற்கு பசியெடுக்காது. .

Friday, August 22, 2014

தேங்காய் துவையல்

உப்புமா, பொங்கல், சப்பாத்தி, இட்லி, தோசை  போன்ற பல டிபன் வகைகளுக்கு  நன்றாகவே துணை போகும் தேங்காய் துவையல் . அதன் செய்முறையை  பார்ப்போம்.






இதற்குத் தேவையானவை :
  1. ஒரு மூடி தேங்காய்  துருவல் .
  2. உளுத்தம்பருப்பு  3 ஸ்பூன்
  3. சிவப்பு மிளகாய், இரண்டு அல்லது மூன்று ( உங்கள் ருசிக்கேற்ப)
  4. புளி  சின்ன எலுமிச்சை அளவு
  5. உப்பு  ருசிக்கேற்ப
  6. பெருங்காயம்  சிறிது
  7. எண்ணெய்  ஒரு ஸ்பூன் 

செய்முறை :

அடுப்பில் வாணலியை வைத்து  எண்ணெய்  ஊற்றி சூடான பின்,  பெருங்காயம் போட்டு பொரிய வைக்கவும். பின்பு மிளகாய், உளுத்தம்பருப்பு  போட்டு  சிவக்க வறுத்து  எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு மிக்சியில் முதலில், வறுத்த பெருங்காயம்,மிளகாய், உளுத்தம் பருப்பு , உப்பு போட்டு  பொடி செய்யவும். நன்கு நைசாக அரை பட்டவுடன்,  தேங்காய் துருவல், புளி  சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து  மிக்சியில் அரைக்கவும். நன்கு அரை பட்டவுடன். எடுத்து வைத்துக் கொள்ளவும்.


பொங்கலுக்குத் தொட்டுக் கொள்ளவும், சூடான சாதத்தில்  போட்டுப் பிசைந்து சாப்பிடவும்  மிகவும் சுவையாக இருக்கும்.

செய்முறை விளக்கம் இதோ :




பி.கு.தண்ணீர் சேர்க்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். தண்ணீர் அதிகமாகி விட்டால்  துவையல் சட்னியாக மாறும்  அபாயம் உண்டு.

Tuesday, August 19, 2014

வரகரிசி உப்புமா..

சிறு தானியங்களில்  இருக்கும்  ஊட்ட சத்துக்கள்  பற்றி  மிகவும் பரவலாக  இப்பொழுது பேசப்படுகின்றன.
புரத சத்தும், நார் சத்தும்  மிகுந்து காணப்படும் வரகரிசி (Kodo Millet) உப்புமா  செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது.  அதன்  செய்முறையை  இங்கே பகிர்கிறேன்.





வரகரிசி உப்புமா செய்யத் தேவையானவை:

  1. வரகரிசி------1 கப்.
  2. அரிந்த  வெங்காயம் ----சிறிது
  3. நறுக்கிய பச்சை மிளகாய்(1)  அல்லது கிள்ளிய  சிவப்பு மிளகாய் (1)
  4. கடுகு  ---1 ஸ்புன் 
  5. உளுத்தப்பருப்பு-----1 ஸ்பூன் 
  6. பெருங்காயம் --சிறிது.
  7. உப்பு ----ருசிக்கேற்ப.
  8. தாளிக்க  எண்ணெய் --1 ஸ்பூன்.
  9. கறிவேப்பிலை  சிறிது.

செய்முறை :

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி,  சூடானதும் , பெருங்காயம் போட பொரிந்து வரும். பிறகு கடுகு  போட்டு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு சேர்க்கவும். அது சிவக்கும் போது , வெங்காயம் பச்சை மிளகாய் , கறிவேப்பிலை  சேர்த்து வதக்கவும், வதங்கியதும், இரண்டரை கப்  தண்ணீர்  உற்றவும். தேவையான உப்பு சேர்க்கவும்.( 1கப்  வரகரிசிக்கு சுமார் இரண்டரை கப்  தண்ணீர் )

தண்ணீர  கொதிக்க  ஆரம்பித்ததும்,  வரகரிசியைப் போட்டு  கிளறவும். அடுப்பை சிம்மில் வைத்து ஒரு தட்டுப் போட்டு மூடி  விடவும். வரகரிசி வேக, சுமார் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் ஆகும். வெந்த பிறகு நன்கு உதிரிஉதிரியாக வரும். இப்பொழுது கேசை நிறுத்தி  விடலாம்.





சூடு  ஆறுவதற்கு முன்பாக பரிமாறவும். இதனுடன் புளிமிளகாய்  தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும்  சுவையாக இருந்தது.நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.

 

Sunday, August 10, 2014

பாகற்காய் பிரட்டல்.

பாகற்காய் என்றாலே காத தூரம்  ஓடும் குடும்பத்தினரை, இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும், என்று சொல்ல வைக்கும் இந்த பாகற்காய் பிரட்டல்.

பாகற்காய் பிரட்டல் செய்யத் தேவை:






  1.  பாகற்காய்-------------கால் கிலோ .
  2. புளி ----------------------எலுமிச்சை அளவு.
  3. உப்பு----------------------தேவைக்கேற்ப.
  4. மஞ்சள் தூள்-----------கால் ஸ்பூன் .
  5. சாம்பார் பொடி ------- உங்கள் ருசிக்கேற்ப 
  6. எண்ணெய் ------------2 அல்லது 3 ஸ்பூன் 
  7. சர்க்கரை----------------2 ஸ்பூன் ( டையாபிடிஸ் இருந்தால்  சர்க்கரைக்குப் பதிலாக artificial  sweetener உபயோகிக்கலாம்)
  8. கடுகு -------------------- 1 ஸ்பூன் ( விருப்பப்பட்டால்)

 செய்முறை:

முதலில் பாகற்காயை நீள வாக்கில்  அரிந்து  வைத்துக் கொள்ளவும் . பின்பு புளியை சிறிது கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில்  வாணலியை வைத்து , எண்ணெய்  ஊற்றி, காய்ந்ததும், நறுக்கி வைத்தப் பாகற்காய்களைப் போட்டு இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிரட்டிக் கொண்டிருக்கவும்.பின்பு கரைத்து வைத்தப் புளியை ஊற்றி,தேவையான உப்பு, மஞ்சள் பொடி , சாம்பார் பொடிப் போட்டு , சாரணியால் நன்கு கிளறி விட்டு
கேசை  சிம்மில் வைத்து, ஒரு தட்டால் மூடி விடவும்.

அவ்வப்பொழுது கரண்டியால் பிரட்டி விடவும். நன்கு வெந்ததும், மூடியை எடுத்து விடவும்..அதிலிருக்கும் தண்ணீர் எல்லாம் சுண்டும் வரை  கிளறிக் கொண்டே இருக்கவும்.சுவைப் பார்க்கவும் எது தேவையோ அதை சிறிது சேர்க்கலாம். தேவையானால் சிறிது எண்ணெய்  ஊற்றிப் பிரட்டி விடவும்.நன்கு சுருண்டு வரும் போது , சர்க்கரைத் தூவி  அடுப்பை சிம்மில் வைத்து  இரண்டு நிமிடம் பிரட்டவும். சுவைப் பார்க்கவும். உங்கள் ருசிக்கேற்ப வேண்டுமானால் சர்க்கரை சிறிது சேர்த்துக் கொள்ளலாம். பின்பு அடுப்பிலிருந்து இறக்கவும்.
சாதத்தோடு  பரிமாறவும்.


                                              


சாதத்தில் போட்டுப் பிசைந்து கொண்டும் சாப்பிடலாம். தயிர் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள புளிப்பு, உறைப்பு, உப்பு, இனிப்பு சேர்ந்து ...........ஆஹா.....தேவாமிர்தமாகும்  தயிர் சாதம்.

Sunday, July 13, 2014

வெந்தய மாங்காய் ஊறுகாய்

சட்டென்று மாங்காய் ஊறுகாய் சாப்பிடத் தோன்றுகிறதா?
இதோ வெந்தய மாங்காய் ஊறுகாய். செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.


செய்யத் தேவையானவை :





  1. மாங்காய்
  2. சிவப்பு மிளகாய் உங்கள் ருசிக்கேற்ப 
  3. வெந்தயம் ஒரு டீஸ்பூன்
  4. பெருங்காயம் சிறிது.
  5. உப்பு  தேவைக்கேற்ப
  6. கடுகு ஒரு டீஸ்பூன்
  7. நல்லெண்ணெய் இரண்டு குழிக்கரண்டி.

செய்முறை








மாங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.சிவப்பு மிளகாய் உங்கள் ருசிக்கேற்ப எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து ஒரு ஸ்புன் எண்ணெய் விடவும். பெருங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும்.
அடுப்பை சிம்மில் வைத்தபின் வெந்தயம் போடவும். வெந்தயம் சட்டென்று சிவந்து விடும் . சிவந்த உடனே  வறுத்த பெருங்காயத்தையும், வறுத்த வெந்தயத்தையும் எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.பின்பு மிளகாயைப் போட்டு அதையும்  வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.வறுத்த எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு , உப்பையும் சேர்த்து நன்கு நைசாக  அரைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எடுத்து வைத்திருக்கும் இருக்கும் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளிக்கவும், பின் நறுக்கிய மாங்காயைப் போட்டு  அரைத்த பொடியைப் போட்டு சில நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து பிரட்டி விடவும். பின்பு இறக்கி ஆறிய பின் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
(அதிக நேரம் அடுப்பில் வைக்க வேண்டாம்.மாங்காய் வேக வேண்டிய அவசியமில்லை )

உடனேயும்  மோர் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ளாம். ஆனால் மறு நாள் ஊறுகாயை சுவைத்தால் நன்கு ஊறி சுவையாகக் காணப்படும்.

குறிப்பு:  வெந்தயம் வறுக்கும் போது  கவனம் தேவை வெந்தயம் தீய்ந்து  விட்டால் ஊறுகாய் கசந்து விடும்.






அதிக நாட்கள்  வைத்திருக்க வேண்டுமானால் பிரிட்ஜில் வைத்துக் கொள்ளவும்.

Saturday, June 21, 2014

மாங்காய் தொக்கு

மாங்காய் தொக்கு செய்து சாப்பிடலாம் வாங்க!
தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:


  1. பெரிய மாங்காய் 1 அல்லது 2.
  2. மிளகாய் பொடி  உங்கள் ருசிக்கேற்ப .
  3. மஞ்சள் பொடி சிறிது.
  4. பெருங்காயப்பொடி  சிறிது.
  5. உப்பு  தேவைக்கேற்ப .
  6. நல்லெண்ணெய்  இரண்டு  குழிக்கரண்டி  அளவு.
  7. கடுகு - ஒரு  டீஸ்புன் 
  8. வெந்தயம் சிறிது.

செய்முறை :

முதலில் மாங்காயை  படத்தில் உள்ளது போல் தோலை எடுத்து விட்டு,செதில் செதிலாக  செதுக்கிக் கொள்ளவும். பின்பு கடாயில் சிறிது  நல்லெண்ணெய்  விட்டு , காய்ந்தவுடன்  கடுகு போடவும். பெருங்காயப்  பொடியையும் போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன் .செதுக்கி வைத்த மாங்காயை போடவும்.உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து பிரட்டி விடவும்.
 
கேஸை சிம்மில் வைத்து , ஒரு தட்டால்  மூடி வைக்கவும்.அவ்வப்பொழுது கரண்டியால் பிரட்டி விடவும். சிறிது நேரம் ஆனவுடன் மாங்காய் வெந்து ,கிளறும் போது ஒன்றாக  சேர்ந்து வரும். அப்பொழுது மிளகாய் பொடியைப் போட்டு நன்கு கிளறி விடவும். இப்பொழுது மீதி நல்லெண்ணையை  ஊற்றி இரண்டு நிமிடங்கள் கிளறி விட்டபின்  கேசை  நிறுத்தி விடலாம்.

விருப்பப்பட்டால் வெந்தயத்தை சிவக்க வறுத்துப் பொடி செய்து தூவலாம்.நல்ல வாசனையாக இருக்கும்.

ஆறின பிறகு கண்ணாடி பாட்டிலில்  போட்டு மூடி வைக்கவும்.
தயிர் சாதத்துடன்  தொட்டுக் கொள்ள, தட்டில்  தயிர் சாதம்  இருந்த தடயமே இல்லாமல் காலியாகியிருக்கும்.




செய்து பார்த்து , உங்கள் கருத்துக்களை  என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.



Friday, May 30, 2014

வெங்காய மாங்காய் சாலட்

இந்தத் தயாரிப்பு  மிகவும் பிரபலம் இல்லை எனலாம்.. என் அம்மா வீட்டில் செய்வதுண்டு. வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடமிருந்து எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கும் இந்த ரெசிபியை  இங்கே பகிர்கிறேன்.  செய்து தான் பாருங்களேன். உங்கள் "உள்ளம் கேட்குமே மோர்."
வெங்காய மாங்காய்  செய்வது எப்படி என்று பார்ப்போமா?அடுப்புத் தேவைப்படாத தயாரிப்பு.





தேவையானவை

  1. பொடியாக  நறுக்கிய மாங்காய் சிறிது .
  2. ஒரு பெரிய வெங்காயம் பொடியாக.
  3. மஞ்சள் பொடி  கால் ஸ்பூன் .
  4. சாம்பார்பொடி  ஒரு ஸ்பூன் .
  5. உப்பு  தேவைக்கேற்ப.
  6. சர்க்கரை  ஒரு ஸ்பூன் .

செய்முறை: 

பொடியாக நறுக்கிய வெங்காயம், மாங்காய், உப்பு, சர்க்கரை ,மஞ்சள்  பொடி, சாம்பார் பொடி  எல்லாவற்றையும் ஒரு கின்னத்தில் போட்டு கொஞ்சமாய் தண்ணீர் தெளித்து, கரண்டியால் கலந்து விடவும்.
ருசி பார்க்கவும். உங்கள் விருப்பம் போல்  எதை வேண்டுமானாலும் நீங்கள் அதிகப் படுத்திக் கொள்ளலாம். விருப்பமிருந்தால் கடுகு தாளிக்கலாம்.

மாங்காயுடன் ,வெங்காயம் , சர்க்கரை எப்படி சேரும் என்று சந்தேகப்பட வேண்டாம். கலந்து சாப்பிட்டுப் பாருங்கள் . தயிர் சாதத்திற்கு  நன்றாகவே ஜோடி சேரும்.  சாப்பிட்டுப் பார்த்து உங்கள்  கருத்துக்களை சொல்லுங்கள்.





Saturday, May 10, 2014

புளிமிளகாய்

புளிமிளகாய்  எப்படி செய்வது என்று பார்ப்போமா?






தேவையானவை :

  1. புளி    ஒரு பெரிய எலுமிச்சை அளவு 
  2. பச்சை மிளகாய்  ஒரு கைப்பிடியளவு. ( நான் சுமார் நூறு கிராம் எடுத்துள்ளேன்.
  3. உப்பு  தேவைக்கேற்ப
  4. வெல்லம் சிறிது.
  5. எண்ணெய் ஒரு  ஸ்பூன் 
முதலில் வாணலியை  அடுப்பில் வைத்து  ஒரு ஸ்பூன் எண்ணெயை அதில் விடவும். நன்கு சுத்தம் செய்த பச்சை மிளகாய்களை  அதில் அப்படியே போட்டு வதக்கவும். நறுக்காமல் போடுவதால்  சிலது  வெடிக்கும்.  கொஞ்சம்  கவனம் தேவை . படத்தில் காட்டியது போல் வதங்கிய பின்  அடுப்பிலிருந்து இறக்கி  ஆற   வைக்கவும்.

பின்பு, மிக்சியில் புளி , வதக்கின பச்சை மிளகாய், உப்பு  எல்லாவற்றையும் போட்டு  அரைக்கவும். தண்ணீர் சேர்க்கவே வேண்டாம். நன்கு அரைபடும். நன்கு அரைபட்டதும் , இந்தக் கலவையில் வெல்லத்தைப் போட்டு ஒரு சில வினாடிகள் மிக்சியை சுத்தவும். பின்பு ருசிப்  பார்க்கவும். உப்பு, வெல்லம் , புளி  இதில் எது வேண்டுமானாலும்  உங்கள் விருப்பத்திற்கேற்ப
இன்னும் சிறிது அதிகமாக இருக்கலாம் என்று தோன்றினால்  மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளலாம். கன்னாடி பாட்டிலக்ளில் வைத்துக் கொள்ளுங்கள் . தண்ணீர் சேர்க்காததானால்  மாதக் கணக்கில் கெட்டுப் போகாது புளி மிளகாய் .

                                     




 தயிர் சாதத்திற்கு மட்டுமல்லாமல், அரிசி உப்புமாவிற்கும்  துணை போகும். தொட்டுக் கொண்டு சாப்பிட்டு பாருங்கள் . அருமையான சுவையோடு இருக்கும்.உங்கள் எண்ணங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.


Tuesday, April 29, 2014

காஞ்சிபுரம் இட்லி

காஞ்சிபுரம் இட்லி  செய்யத் தெரியுமா ?
இதோ   ரெசிபி

தேவையானவை :

ஊற  வைத்து அரைக்க
  1. இட்லி அரிசி (பு. அரிசி) --- 1 கப் 
  2. பச்சை  அரிசி ------  1/2  கப் 
  3. உளுத்தம் பருப்பு -----1 கப் 
  4. வெந்தயம்  -----1/2 ஸ்பூன் 
மாவில் போடுவதற்கு
  1. மிளகு ----1 ஸ்பூன்.
  2. சீரகம் ----1 ஸ்பூன் 
  3. கடுகு -----1 ஸ்பூன் 
  4. உளுத்தம் பருப்பு  ----1 ஸ்பூன் 
  5. கடலை  பருப்பு---------1 ஸ்பூன் \
  6. முந்திரி  சிறிது.
  7. நல்லெண்ணெய்  1 ஸ்பூன் 
  8. நெய் சிறிது.
  9. கருவேப்பிலை  சிறிது.
  10. கொத்தமல்லி-- சிறிது.
  11. இஞ்சி சிறு துண்டு( நறுக்கியது)
  12. ஆப்ப சோடா  ஒரு சிட்டிகை.(விருப்பப்பட்டால்)
  13. மிளகு பொடி சிறிது 
  14. உப்பு  தேவைக்கேற்ப 




செய்முறை 



 4 அல்லது 5 மணி நேரம் அரிசி(இரண்டு அரசியையும்), உ .பருப்பையும்  தனித்தனியாக ஊற வைக்கவும். ஊறின அரிசியை  சற்றே கொரகொரப்பாக  அரைத்துக் கொள்ளவும். ரொம்பவும் கொரகொரப்பாகவும்  இருக்க வேண்டம், ரொம்பவும் நைசாகவும் அரைக்க வேண்டாம். அரிசி உப்புமாவிற்கு அரிசி உடைபடும்  அளவில் இருந்தால் போதும்.உளுத்தம்பருப்பை நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.( சிலர் அரிசி பருப்பு எல்லாம் ஒன்றாகப் போட்டும் அரைப்பார்கள்.  நான் தனியாகத் தான் அரைத்து செய்தேன். ஆப்பசோடா ஒரு சிட்டிகை போடுவதால் தவறில்லை)  அரிசி மாவு, உளுத்தமாவு இரண்டையும் உப்புப் போட்டு  நன்கு கலந்து வைக்கவும். எட்டு மணி நேரம்  ஆன பின்பு, கடாயில் எண்ணெய்  ஊற்றி, சூடான பின்பு ,கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, சீரகம்,  போட்டு சிவக்க வறுக்கவும். பின்பு அதிலேயே  கறிவேப்பிலை, இஞ்சிப் போட்டு  தாளித்து, மாவில் கொட்டவும். முந்திரியையும் நெய்யில் வறுத்து மாவில் போடவும். மறக்காமல் மிளகுத் தூளை சேர்க்கவும். சுக்கும் தூள் செய்து  சேர்த்துக் கொள்ளலாம். நான் இஞ்சி மட்டுமே சேர்த்தேன்.

பிறகு,இட்லி தட்டிலோ, அல்லது சின்ன சின்ன கப்பிலோ  ஊற்றி  வேக வைக்கவும்.
தேங்காய் சட்னியுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடவும்.






சாப்பிட்ட பின் உங்கள் கருத்துக்களை  என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.


Saturday, April 12, 2014

பூண்டு மிளகாய் துவையல்

இட்லி, தோசை, இவற்றிற்கு  பூண்டு  மிளகாய் துவையலை தொட்டுக் கொள்ளலாம்.  இட்லி, தோசையின் சுவையைக் கூட்டுவதோடு, மட்டுமல்லாமல்  இதயத்திற்கும் நல்லது செய்யும் .

தேவையான பொருட்கள்.

  • பூண்டு  உரித்தது கைப்பிடியளவு.
  • சிவப்பு  மிளகாய்- உங்கள் தேவைக்கேற்ப.
  • புளி--ஒரு கொட்டைப் பாக்களவு.
  • உப்பு- ருசிக்கேற்ப
  • எண்ணெய்- அரை  டீஸ்பூன்




செய்முறை  :

முதலில் வாணலியில் என்னெய்  விட்டு சூடானவுடன், மிளகாயைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். எடுத்துக் கொண்டிருக்கும் மிளகாயின் அளவு  பூண்டின் அளவை விடவும் அதிகமாக இருப்பது நல்லது.அப்பொழுது தான் ' பிசுக் ' என்று ஒட்டாமல் இருக்கும்.மிளகாய் வறுத்ததும் ,எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின் அடுப்பை அணைத்து விடவும். சூடாக இருக்கும் வாணலியில்  பூண்டைப் போட்டு மிக லேசாக வதக்கவும்.

மிக்சியில் முதலில் வறுத்த மிளகாய், உப்புப் போட்டு  பொடித்துக் கொள்ளவும். நன்கு பொடியானதும் புளி , போட்டு இரண்டு சுத்து சுத்தவும். அதோடு லேசாக வதக்கின பூண்டைப் போட்டு  நைசாக அரைக்கவும்.

அரைத்ததை ,எவர்சில்வர்  டப்பாவிலோ, கண்ணாடி பாட்டிலிலோ எடுத்து வைத்துக் கொள்ளவும். நீண்ட நாட்கள் இருக்கும் . தண்ணீர் சேர்க்காததினால் கெட்டு விடும் அபாயமில்லை. வேண்டுமென்றால், பிரிட்ஜிலும் வைத்துக் கொள்ளலாம்.





இட்லி, தோசையுடன், தொட்டுக் கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள். உங்கள் அனுபவங்களை எனக்கு சொல்லுங்கள். 

Friday, January 31, 2014

சரவண பவன் சாம்பார்.

இணைய தளம் ஒன்றில், இந்த சாம்பார் செய்முறை படித்தேன் .செய்தும்  பார்த்தேன். அற்புதமான ருசியில் இருந்தது. அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 சுவையான  சாம்பார்(சரவண  பவன்)  செய்வது எளிது . எப்படி செய்வது என்று பார்ப்போம்.







இட்லி, தோசை, பொங்கல் போன்ற டிபனிற்கு  தொட்டுக் கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள்.அபார  ருசி. இந்த ருசியில் டிபன் , டேபிளில் இருந்த இடம் தெரியாமல் காலியாகும்.


நீங்கள் பாசத்துடனும், அன்புடனும் சாம்பாரை பரிமாறும் போது , கண்டிப்பாக கூடுதல்  ருசி கிடைக்கும் . நம்புங்கள். 

Tuesday, January 21, 2014

தக்காளி ஊறுகாய்

தக்காளி ஜுஸ், ரசம்  என்பது நாம் சாதரணமாக  செய்வது. தக்காளி சீசனில் கிடைக்கும் போது  வாங்கி ஊறுகாய் செய்து வைக்கலாம். அதிக நாட்கள் இருக்கும்.




தக்காளி ஊறுகாய்  செய்யத் தேவையானவை.:

தக்காளி  பெரிதாக 4 அல்லது 5.
(கொஞ்சம் கெட்டியாக இருக்கட்டும். ரொம்பவும் பழுத்ததாக இருந்தால் ஊறுகாய் அவ்வளவு நன்றாக இருக்காது.) 

புளி  ஒரு உருண்டை.
உப்பு  ருசிக்கேற்ப.
மிளகாய் தூள்  இரண்டு சின்ன கிண்ணம்.
நல்லெண்ணெய்   5 டீஸ்பூன் 
கடுகு   2 டீஸ்பூன் .
கடலைபருப்பு  2 டீஸ்பூன் .

செய்முறை:

தக்காளியை நன்கு அலம்பி ,பின் நன்றாகத் துடைத்து  சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.கோது நீக்கிய, புளியை ஒரு கிண்ணத்தில் போட்டு, அதன் மேல் இந்த நறுக்கிய தக்காளியைப் போட்டு மூடி வைக்கவும். படத்தில்  காட்டியது போல் நறுக்கிய தக்காளிகளை வைக்கவும். அப்பொழுது தான்  தக்காளி சாற்றில் புளி  ஊறும்.ஒரு மணி நேரத்திற்கு ஊறட்டும்.








உப்பு  படத்தில் காட்டியுள்ள  அளவு. 
ஒரு கைப்பிடியளவு போட்டிருக்கிறேன்.



மிளகாய் பொடி  படத்தில் இருக்கும் கிண்ணத்தில்  இரண்டு கிண்ணம்எடுத்துக் கொண்டேன். நீங்கள் உங்கள் ருசிக்கேற்ப  எடுத்துக் கொள்ளலாம்.                                                                



 ஒரு மணி நேரம் ஊறட்டும். பின்பு , தக்காளி, புளி  ,உப்பு எல்லாவற்றையும்  மிக்சியில் போட்டு  நன்றாக அரைக்கவும். நன்கு நைசாக இருக்கட்டும். கண்டிப்பாக  தண்ணீர் சேர்க்காமல் தான் அரைக்க வேண்டும்.
 நன்றாகவே அரைபடும்.

விழுதாக வருவதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு மிளகாய் பொடியைப் போட்டு கரண்டியால் நன்கு கிளறவும்.

ருசி பார்க்கவும். உப்பு , மிளகாய் பொடி, புளி  இதில் .எது இன்னும் கொஞ்சம் போட்டால் ருசி  நன்றாக  இருக்கும்  என்று  உங்களுக்குத்  தோன்றுகிறதோ  ,
திரும்பவும் கொஞ்சம் சேர்த்து  போட்டு மிக்சியில்  அரைக்கலாம். 

அடுப்பில் வாணலியை வைத்து, நல்லெண்ணெயை ஊற்றவும்.எண்ணெய்  சூடானதும், கடுகு போட்டு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்  பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு அரைத்த விழுதை  சேர்க்கவும். அடுப்பை  சிம்மில் வைத்து இரண்டு, மூன்று  நிமிடங்கள் வரை கிளறிக் கொண்டு இருக்கவும். பிறகு  அடுப்பை நிறுத்தி விடவும். 




தக்காளி ஊறுகாய்  ரெடி.

கூடுதல் சுவைக்கு:  முருங்கைக்காயை சாம்பாருக்கு நறுக்குவது போல் நறுக்கி , அப்படியே பச்சையாக , தக்காளி ஊறுகாயில்(அடுப்பிலிருந்து இறக்கிய பிறகு) போட்டு  விடவும். கரண்டியால் கலக்கவும். தக்காளி ஊறுகாய் சுவை + முருங்கைக்காயின் ருசி அபாரமாக இருக்கும்.

ஆறிய பின் ஊறுகாயை  கண்ணாடி பாட்டிலில்  வைக்கவும்.
தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம். சப்பாத்திக்குக் கூட  நன்றாக இருக்கும். 

ஊறுகாயை  கண்ணாடி பாட்டிலிலேயே  வைக்கவும். 
பிளாஸ்டிக்  பாட்டில்  உபயோகிக்க  வேண்டாமே . ! ப்ளீஸ் .......

Saturday, January 11, 2014

பாகற்காய் பிட்லே

பாகற்காய்  கசக்கும் ,எல்லோருக்கும் தெரியும். அதை கொஞ்சம் இனிப்பு கலந்து  செய்து கொடுப்போமே. எல்லோருக்கும் பிடிக்கும் பாருங்கள்.



தேவையானவை

பாகற்காய்  -- கால் கிலோ.
புளி ஒரு நெல்லிக்காயளவு.
மஞ்சள் பொடி. கால் ஸ்பூன் .
சாம்பார் பொடி  உங்கள் ருசிக்கேற்ப .
தேங்காய்  2 டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப .
வெல்லம் சிறிதளவு (இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன்  உடைத்த  வெல்லம்)
வறுக்க, தாளிக்க  சிறிதளவு எண்ணெய்.
தாளிக்க கடுகு.
கறிவேப்பிலை,கொத்தமல்லி  சிறிது.


வறுத்து அரைக்க :

பெருங்காயம் சிறிது.
தனியா இரண்டு டீஸ்பூன்
கடலை பருப்பு   இரண்டு டி ஸ்பூன்.
ப.அரிசி   இரண்டு டீஸ்பூன் .
சிவப்பு மிளகாய்  இரண்டு அல்லது மூன்று .

செய்முறை

பாகற்காயை  சிறிய துண்டுகளாக  நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு டீஸ்பூன்  எண்ணயை  வானலியில் ஊற்றி  , எண்ணெய்   காய்ந்ததும், பெருங்காயம் , போட்டு வறுத்து எடுக்கவும் . பின் அரிசி, கடலைபருப்பு, தனியா ,மிளகாய்  எல்லாவற்றையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஆறின பிறகு மிக்சியில் போட்டு தேங்காயையும் சேர்த்து , கொஞ்சமாய்  தண்ணீர் விட்டு  ,விழுதாக  அரைத்து வைக்கவும்.விழுதை ரொம்பவும் நைசாக அரைக்க வேண்டாம். ரொம்பவும் நைசாக அரைத்து விட்டால்  , பிட்ல 'கொழ கொழ 'என்றாகி விடும். கவனம் . முக்கால் வாசி அரைபட்டால் போதும் . அதற்காக ரொம்பவும் கொரகொரப்பாகவும் அரைக்க வேண்டாம்.

புளியை  தண்ணீரில் ஊற  வைக்கவும்.

வாணலியில் எண்ணெய்  ஊற்றிக்  காய்ந்தவுடன், கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள பாகற்காய் இரண்டையும் போட்டு  சிறிது நேரம் வதக்கவும். இரண்டு நிமிடங்கள் பிறகு   ஊற  வைத்த புளியைக் கரைத்து , பாகற்காயில் ஊற்றவும். புளி  கரைசல் சற்றே நீர்க்க இருத்தல் நலம்.
இப்பொழுது மஞ்சள் பொடி, மிளகாய் பொடி உப்பு எல்லாம் போடவும். சாம்பார் பொடி போடும் போது, நீங்கள் அரைத்து வைத்திருப்பதில் மிளகாயும் சேர்ந்திருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும். கொதி வந்தவுடன் சிம்மில் வைத்து மூடி விடவும். சிறிது நேரம் கழித்து பாகற்காய் வெந்தவுடன்,
அரைத்து வைத்த விழுதை ,  அதில் சேர்க்கவும்.. ஒரு கொதி வந்தவுடன்  ,
வெல்லத்தைப் போட்டு  கரைந்தவுடன் இறக்கி வைக்கவும்.
ருசி பார்க்கவும். வெல்லம், காரம் ,உப்பு  வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.அரைத்த விழுதைப் போட்டு அதிக நேரம் கொதித்தால் கொத்சு போல் ஆகிவிடும்.
கொத்தமல்லி தூவி  ,சுடசுட பரிமாறுங்கள். சாதத்தில் போட்டும் பிசைந்து சாப்பிடலாம்.
பரிமாறும் போது  அன்பையும், பாசத்தையும்  அளவில்லாமல் போட்டுப் பரிமாறுங்கள். ருசி  தூக்கலாக இருக்க நான் கியாரண்டி.

Tuesday, January 7, 2014

தக்காளி தோசை.



நான்  நெட்டில் உலா வரும் போது  திருமதி  கீதா  சாம்பசிவம் அவர்களின்  இந்த தோசைக் குறிப்பை படிக்க நேர்ந்தது. சிற்சில மாற்றங்களுடன்  முயற்சித்துப் பார்க்கலாமே  என்று  தோன்ற  மறு நாளே செய்தேன். நன்றாகவே வந்தது.

அதை  இங்கே  உங்களுடன் பகிர்கிறேன்.

தேவையானவை ;

பச்சரிசி  ----1 கப்

இட்லி அரிசி(புழுங்கலரிசி)--1 கப்.

உளுத்தம் பருப்பு --அரை கப்.

துவரம் பருப்பு -----அரை கப்.

தக்காளி------மூன்று அல்லது நான்கு.

பச்சை மிளகாய் -----3

இஞ்சி  ஒரு சின்ன துண்டு.

உப்பு ருசிக்கேற்ப

எண்ணெய் ---- தோசை வார்ப்பதற்கு.

அரிசி பருப்பு வகைகளை  சுமார் நான்கு மணி நேரம் ஊற  வைத்து  மிக்சியிலோ. கிரைண்டரிலோ   அரைக்கவும். பாதி அரைபடும் பொது , இஞ்சி, மிளகாய்,  தக்காளி( தோல் நீக்கியோ, நீக்காமலோ).  தக்காளி தோல் நீக்க ,தக்காளியை ஒரு சில நிமிடங்கள் வெந்நீரில் போட்டு வைத்து , பின்பு உரித்தால் தோல் உரிந்து வந்து விடும் .நான் அப்படியே போட்டு அரைத்தேன். பல்லில் தக்காளித் தோல் அகப்படுமோ என்று நினைத்தேன். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.  நம் சிறுநீரகங்களுக்கும்  நல்லது ஆச்சு .  நல்ல நைசாக அரைத்த பின்பு  , உப்புப் போட்டு ,கலந்து விட்டு உடனேயே தோசையாக  வார்த்து விடுங்கள்.  அருமையாக இருக்கும்.

நான்-ஸ்டிக்(Non-Stick)  தோசைக்கல் வேண்டாமே!
 நம் பழைய இரும்புத் தோசைக் கல்லிலேயே   தோசை  ஊற்றி  குடும்பத்தினரின் ஆரோக்கியம்  காப்போம்.

இந்தத்  தோசை செய்வதற்கு  தூண்டுகோலாய்  அமைந்த  திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு என் நன்றி.

பட  உதவி---கூகுல் 

Thursday, January 2, 2014

வெங்காயப் பொடி.

















வெங்காயப்  பொடி செய்வதற்குத் தேவையானவை

1. சின்ன வெங்காயம்  ஒரு கைப்பிடி.

2. துவரம்பருப்பு  ஒரு  ஆழாக்கு .(வெங்காயத்தை விடவும், பருப்பின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் பொடி நன்றாக இருக்கும் .)

3. சிவப்பு  மிளகாய்  உங்கள் ருசிக்கேற்ப.

4. பெருங்காயம் சிறிது.

உப்பு தேவைக்கேற்ப
ஒரு ஸ்பூன்  எண்ணெய் .

வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும்.பருப்பு, மிளகாய், பெருங்காயம் எல்லாவற்றையும் சூடான  எண்ணெயில்  வறுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை லேசாக  வதக்கவும். இரண்டு  நிமிடங்கள் வதக்கினால் போதும் . ரொம்பவும்  வெங்காயம் வதங்கி விட்டால் , வெங்காயப் பொடி ,பொடியாக இல்லாமல் , துவையலைப் போல் ஆகிவிடும். அது மட்டுமல்லாமல்  ருசியும் மாறிவிடக்கூடும் .

மிக்சியில் முதலில், பெருங்காயம், பருப்பு, மிளகாய்,உப்பு எல்லாவற்றையும் போட்டு , நன்றாகப் பொடி செய்து கொள்ளவும். பின்பு (லேசாக ) வதக்கின வெங்காயத்தைப் போட்டு  நாற்பது அல்லது நாற்பத்திஐந்து செகண்ட்ஸ்  மட்டுமே   சுற்றவும்.  (ரொம்ப நேரம்  மிக்சியில் வெங்காயம் போட்டு  சுற்றினால் ,மீண்டும் சொல்கிறேன், வெங்காயம்  துவையலாகி விடும் அபாயம்  உண்டு.)



பின் தட்டில் கொட்டி கைகளால் லேசாக உதிர்த்துக் கொள்ளவும்.

கண்ணாடி பாட்டிலில் வைக்கவும். பல  நாட்கள் நன்றாகவே இருக்கும்.
ஃ பிரிட்ஜில் வைத்தும்  சாப்பிடலாம். வேண்டும் போது சூடான சாதத்தில், சிறிது நல்லெண்ணெய் விட்டு ,வெங்காயப் பொடிபோட்டு பிசைந்து  சாப்பிடுங்கள் .
ஒரு பிடி  அதிகமாகவே சாப்பிட்டு விடுவீர்கள்  பாருங்களேன் !
உங்களுக்குப் பிடித்திருந்தால் சொல்லுங்களேன்!