Sunday, August 14, 2016

தவலை வடை !


To read this recipe in English click here.
தவலை வடை செய்யத் தேவையானவை:


பச்சரிசி-2 டம்ளர்.
கட லைப்  பருப்பு- 3/4 டம்ளர்.
துவரம் பருப்பு--1/4 டம்ளர்
உளுத்தம் பருப்பு- ஒரு கைப்பிடி அளவு.
பெருங்காயம் -சிறிது.
சிவப்பு மிளகாய்-2.
மிளகு-1 ஸ்பூன் (ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்)
 கடுகு- 1 ஸ்பூன்
தேங்காய் பல்பல்லாக நறுக்கியது -2 அல்லது 3 ஸ்பூன்.
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை  சிறிது.
எண்ணெய் -  பொறிக்க.

பச்சரிசி,பருப்பு வகையறாக்கள் எல்லாவற்றையும் நான்கைந்து மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறிய பிறகு மிக்சியில் போட்டு, மிளகாய், உப்பு, பெருங்காயம்  சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவில் பெருங்காயம், மிளகுத் தூள் , நறுக்கியத் தேங்காய், கறிவேப்பிலைப் போட்டு கலந்து கொள்ளவும்.

                               


அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சிறிது  எண்ணெய் விட்டு சூடான பிறகு கடுகு போடவும்..வெடித்த கடுகை , அரைத்தது வைத்துள்ள மாவில் கொட்டவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி , சூடானதும், சின்னக் கரண்டியால் மாவை எடுத்து, எண்ணெயில்  சின்ன சின்ன வடைகளாக  ஊற்றவும்.
அவ்வப்பொழுது பிரட்டி விடவும், பொன்னிறமானதும்  எடுத்து விடவும்.

கடுகு, மிளகு, தேங்காய். கறிவேப்பிலை மணத்தத்துடன் தவலை  வடை மிக சுவையாக இருக்கும்.

வடையை, சட்னி, சாம்பாருடன் சாப்பிட சுவை கூடும்.







ஏன் இதற்குத் தவலை  வடை என்று பெயர் வந்தது ? உங்களுக்குத்  தெரியுமா?

என் பாட்டி , எண்ணெயில் வடையை பொறித்து எடுக்கவில்லை. ஒரு பெரிய தவலையை அடுப்பில் வைத்து,  அதன் உள்ளே அடிப்பாகம் , உள் சுவர் எல்லாம்  எண்ணெய் தடவி, அதன் மேல் மாவை, வடை வடையாக தட்டி ஒரு கனமான தட்டால்  மூடி , சின்னதாக எரியும் விறகடுப்பில் வைத்து விடுவார்கள்.
வடை நன்கு மொறுமொறுவென்று வெந்ததும் , தானாகவே  தவலையின் உள் சுவற்றிலிருந்து "பொத் பொத்" தென்று விழுந்து விடும். பிறகென்ன எடுத்து சுடச்சுட சாப்பிட வேண்டியது தான். இதற்கு எண்ணெய் தேவை மிக மிக சிறிதே.

அவ்வளவு ஆரோக்கியமான வடையை, இப்பொழுது எண்ணெயில் குளிக்க வைத்து வாய் கூசாமல்  தவலை வடை  என்று சொல்லிக் கொள்கிறோம்.
விறகடுப்பும் இல்லை, தவலையும் இல்லை, ஆனால் தவலைவடை  மட்டும் உண்டு.

அதெல்லாம் கிடக்கட்டும்....
நீங்கள்,..... உங்கள் சௌகர்யப்படி வடையை  செய்து கொள்ளுங்கள். சுவை எப்படி இருந்தது என்பதை மட்டும் எனக்குத் தெரியப்படுத்த மறக்காதீர்கள்!