Monday, August 25, 2014

குதிரைவாலி பொங்கல். ( Barnyard Millet)

குதிரைவாலி  அரிசி ஒரு வகை சிறு தானியம். நம் அரிசியில் பொங்கல், உப்புமா செய்வது போல் ,  குதிரைவாலி பொங்கல் செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது. புரதம், நார் சத்து, விட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.குதிரைவாலிப் பொங்கல் செய்முறை பார்ப்போமா?




தேவையானவை  :

  1. குதிரைவாலி அரிசி -- 1 கப் 
  2. பாசி பருப்பு -----1/4 கப் 
  3. மிளகு ஒரு ஸ்புன் 
  4. சீரகம்  ஒரு ஸ்பூன் 
  5. முந்திரி  சிறிது.
  6. நெய் இரண்டு ஸ்பூன் 
  7. இஞ்சி ஒரு சிறிய துண்டு ( நறுக்கியது )
  8. கறிவேப்பிலை சிறிது.
  9. உப்பு  தேவைக்கேற்ப. 

செய்முறை:

பாசிபருப்பை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் குதிரைவாலி அரிசியைக்  களைந்து,  வறுத்த பாசிபருப்புடன் கலந்து  மூன்று  கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து  3 அல்லது 4 விசில்  வரும் வரை  வைத்து , பின்பு கேசை நிறுத்தி விடவும்.

குக்கர்  நன்கு ஆறியவுடன், திறந்து, வெந்த குதிரைவாலி அரிசி பருப்பு இரண்டையும் கரண்டியால் லேசாக மசிக்கவும். கெட்டியாக இருந்தால் வெந்நீர் ஊற்றி உங்களுக்கு வேண்டுமளவிற்குத் தளர்த்திக் கொள்ளலாம். தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்..பின்பு வாணலியை அடுப்பில் வைத்து நெய் விடவும், சூடானதும் , மிளகு, சீரகம், முந்திரி போட்டு சிவக்க வறுக்கவும். சிவந்ததும், இஞ்சி கறிவேப்பிலை சேர்த்து  பொங்கலில்  போடவும். மிகவும்  மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.

                                   




 தேங்காய் சட்னியுடன் பொங்கலை  சூடாகப் சாப்பிடவும்.


பி.கு. : குதிரைவாலி  அரிசி வெந்ததும்  அளவில் நிறைய ஆகிவிடும்.அதனால்
முதல் முறை செய்யும் போது சற்று கவனமாக  அளவைக் குறைத்துப்  போட்டுக் கொள்ளவும். அதே போல்  கொஞ்சம் சாப்பிட்டாலே  திருப்தியாக இருக்கும் . வெகு நேரத்திற்கு பசியெடுக்காது. .

Friday, August 22, 2014

தேங்காய் துவையல்

உப்புமா, பொங்கல், சப்பாத்தி, இட்லி, தோசை  போன்ற பல டிபன் வகைகளுக்கு  நன்றாகவே துணை போகும் தேங்காய் துவையல் . அதன் செய்முறையை  பார்ப்போம்.






இதற்குத் தேவையானவை :
  1. ஒரு மூடி தேங்காய்  துருவல் .
  2. உளுத்தம்பருப்பு  3 ஸ்பூன்
  3. சிவப்பு மிளகாய், இரண்டு அல்லது மூன்று ( உங்கள் ருசிக்கேற்ப)
  4. புளி  சின்ன எலுமிச்சை அளவு
  5. உப்பு  ருசிக்கேற்ப
  6. பெருங்காயம்  சிறிது
  7. எண்ணெய்  ஒரு ஸ்பூன் 

செய்முறை :

அடுப்பில் வாணலியை வைத்து  எண்ணெய்  ஊற்றி சூடான பின்,  பெருங்காயம் போட்டு பொரிய வைக்கவும். பின்பு மிளகாய், உளுத்தம்பருப்பு  போட்டு  சிவக்க வறுத்து  எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு மிக்சியில் முதலில், வறுத்த பெருங்காயம்,மிளகாய், உளுத்தம் பருப்பு , உப்பு போட்டு  பொடி செய்யவும். நன்கு நைசாக அரை பட்டவுடன்,  தேங்காய் துருவல், புளி  சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து  மிக்சியில் அரைக்கவும். நன்கு அரை பட்டவுடன். எடுத்து வைத்துக் கொள்ளவும்.


பொங்கலுக்குத் தொட்டுக் கொள்ளவும், சூடான சாதத்தில்  போட்டுப் பிசைந்து சாப்பிடவும்  மிகவும் சுவையாக இருக்கும்.

செய்முறை விளக்கம் இதோ :




பி.கு.தண்ணீர் சேர்க்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். தண்ணீர் அதிகமாகி விட்டால்  துவையல் சட்னியாக மாறும்  அபாயம் உண்டு.

Tuesday, August 19, 2014

வரகரிசி உப்புமா..

சிறு தானியங்களில்  இருக்கும்  ஊட்ட சத்துக்கள்  பற்றி  மிகவும் பரவலாக  இப்பொழுது பேசப்படுகின்றன.
புரத சத்தும், நார் சத்தும்  மிகுந்து காணப்படும் வரகரிசி (Kodo Millet) உப்புமா  செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது.  அதன்  செய்முறையை  இங்கே பகிர்கிறேன்.





வரகரிசி உப்புமா செய்யத் தேவையானவை:

  1. வரகரிசி------1 கப்.
  2. அரிந்த  வெங்காயம் ----சிறிது
  3. நறுக்கிய பச்சை மிளகாய்(1)  அல்லது கிள்ளிய  சிவப்பு மிளகாய் (1)
  4. கடுகு  ---1 ஸ்புன் 
  5. உளுத்தப்பருப்பு-----1 ஸ்பூன் 
  6. பெருங்காயம் --சிறிது.
  7. உப்பு ----ருசிக்கேற்ப.
  8. தாளிக்க  எண்ணெய் --1 ஸ்பூன்.
  9. கறிவேப்பிலை  சிறிது.

செய்முறை :

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி,  சூடானதும் , பெருங்காயம் போட பொரிந்து வரும். பிறகு கடுகு  போட்டு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு சேர்க்கவும். அது சிவக்கும் போது , வெங்காயம் பச்சை மிளகாய் , கறிவேப்பிலை  சேர்த்து வதக்கவும், வதங்கியதும், இரண்டரை கப்  தண்ணீர்  உற்றவும். தேவையான உப்பு சேர்க்கவும்.( 1கப்  வரகரிசிக்கு சுமார் இரண்டரை கப்  தண்ணீர் )

தண்ணீர  கொதிக்க  ஆரம்பித்ததும்,  வரகரிசியைப் போட்டு  கிளறவும். அடுப்பை சிம்மில் வைத்து ஒரு தட்டுப் போட்டு மூடி  விடவும். வரகரிசி வேக, சுமார் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் ஆகும். வெந்த பிறகு நன்கு உதிரிஉதிரியாக வரும். இப்பொழுது கேசை நிறுத்தி  விடலாம்.





சூடு  ஆறுவதற்கு முன்பாக பரிமாறவும். இதனுடன் புளிமிளகாய்  தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும்  சுவையாக இருந்தது.நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.

 

Sunday, August 10, 2014

பாகற்காய் பிரட்டல்.

பாகற்காய் என்றாலே காத தூரம்  ஓடும் குடும்பத்தினரை, இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும், என்று சொல்ல வைக்கும் இந்த பாகற்காய் பிரட்டல்.

பாகற்காய் பிரட்டல் செய்யத் தேவை:






  1.  பாகற்காய்-------------கால் கிலோ .
  2. புளி ----------------------எலுமிச்சை அளவு.
  3. உப்பு----------------------தேவைக்கேற்ப.
  4. மஞ்சள் தூள்-----------கால் ஸ்பூன் .
  5. சாம்பார் பொடி ------- உங்கள் ருசிக்கேற்ப 
  6. எண்ணெய் ------------2 அல்லது 3 ஸ்பூன் 
  7. சர்க்கரை----------------2 ஸ்பூன் ( டையாபிடிஸ் இருந்தால்  சர்க்கரைக்குப் பதிலாக artificial  sweetener உபயோகிக்கலாம்)
  8. கடுகு -------------------- 1 ஸ்பூன் ( விருப்பப்பட்டால்)

 செய்முறை:

முதலில் பாகற்காயை நீள வாக்கில்  அரிந்து  வைத்துக் கொள்ளவும் . பின்பு புளியை சிறிது கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில்  வாணலியை வைத்து , எண்ணெய்  ஊற்றி, காய்ந்ததும், நறுக்கி வைத்தப் பாகற்காய்களைப் போட்டு இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிரட்டிக் கொண்டிருக்கவும்.பின்பு கரைத்து வைத்தப் புளியை ஊற்றி,தேவையான உப்பு, மஞ்சள் பொடி , சாம்பார் பொடிப் போட்டு , சாரணியால் நன்கு கிளறி விட்டு
கேசை  சிம்மில் வைத்து, ஒரு தட்டால் மூடி விடவும்.

அவ்வப்பொழுது கரண்டியால் பிரட்டி விடவும். நன்கு வெந்ததும், மூடியை எடுத்து விடவும்..அதிலிருக்கும் தண்ணீர் எல்லாம் சுண்டும் வரை  கிளறிக் கொண்டே இருக்கவும்.சுவைப் பார்க்கவும் எது தேவையோ அதை சிறிது சேர்க்கலாம். தேவையானால் சிறிது எண்ணெய்  ஊற்றிப் பிரட்டி விடவும்.நன்கு சுருண்டு வரும் போது , சர்க்கரைத் தூவி  அடுப்பை சிம்மில் வைத்து  இரண்டு நிமிடம் பிரட்டவும். சுவைப் பார்க்கவும். உங்கள் ருசிக்கேற்ப வேண்டுமானால் சர்க்கரை சிறிது சேர்த்துக் கொள்ளலாம். பின்பு அடுப்பிலிருந்து இறக்கவும்.
சாதத்தோடு  பரிமாறவும்.


                                              


சாதத்தில் போட்டுப் பிசைந்து கொண்டும் சாப்பிடலாம். தயிர் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள புளிப்பு, உறைப்பு, உப்பு, இனிப்பு சேர்ந்து ...........ஆஹா.....தேவாமிர்தமாகும்  தயிர் சாதம்.