Sunday, October 11, 2015

வத்தக்குழம்பு சாதம்


வத்தக்  குழம்பு  சாதம் செய்யத் தேவையானவை :

வறுத்து அரைக்க 

மிளகாய் --7அல்லது 8 ( உங்கள் விருப்பத்திற்கேற்ப )
தனியா --2 ஸ்பூன்
மிளகு- அரை ஸ்பூன்
சீரகம் --அரை ஸ்பூன்
வெந்தயம் --சிறிது.
முந்திரிப்
பருப்பு --மூன்று அல்லது நான்கு .
பெருங்காயம்--சிறிது .
தேங்காய் துருவல் (விருப்பப்பட்டால்)-- 1 ஸ்பூன்
எண்ணெய் --சிறிது (வறுப்பதற்கு)

தாளிக்க 

கடுகு ------ ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு ----ஒரு ஸ்பூன்
துவரம்பருப்பு------- ஒரு ஸ்பூன்

 மற்றும்
கறிவேப்பிலை சிறிது.
புளி ஒரு சின்ன உருண்டை  தண்ணீரில்  ஊற  வைத்து , கரைத்து வைத்துக் கொள்ளவும்.
உப்புத் தேவையான அளவு.
மஞ்சள் தூள் சிறிது.
தாளிக்க  எண்ணெய் -- இரண்டு டீஸ்பூன்
 

Displaying IMG_1611.JPG
 
செய்முறை :

குக்கரில் வேண்டிய சாதத்தை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வறுத்து அரைக்க வேண்டியவற்றை வறுத்து  எடுத்து ஆற வைக்கவும். பின்பு மிக்சியில் போட்டு சிறிதுத் தண்ணீர்  விட்டு  நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு வாணலியில்  எண்ணெய்  ஊற்றி , சூடானவுடன் , கடுகு  தாளித்து, அது பொரிய ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு , துவரம் பருப்பு போடவும் . பருப்பு  சிவக்க ஆரம்பித்ததும், கரைத்து வைத்திருக்கும் புளியை அதில் ஊற்றி  கொதிக்க வைக்கவும்.புளிக்  கரைசல் ரொம்பவும் கெட்டியாக இருக்க வேண்டாம். சற்று நீர்க்க இருந்தால் தான் புளி  பச்சை வாசனைப் போக கொதிக்க சரியாக இருக்கும். வேண்டிய உப்பு சேர்க்கவும்.

 (கேன்சருக்கு எதிரியான )மஞ்சள் தூள்  சேர்க்க மறக்க வேண்டாம்.

புளியின்  பச்சை வாசனைப் போனவுடன் , நைசாக அரைத்து வைத்திருக்கும் விழுதைப்   போட்டு சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். முந்திரிப் பருப்பு சேர்த்திருப்பதால்  சட்டென்று  கெட்டியாகி விடும். சற்றுக் கெட்டியானவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.

சாதத்தை ஒரு பாத்திரத்தில் கொட்டி சிறிது நெய் ஊற்றி வத்தக் குழம்பை  ஊற்றி  கரண்டியால் நன்கு கலந்து விடவும். சாதம் உதிர் உதிராக இருந்தாலும் நன்றாக இருக்கும், சற்றே குழைந்த சாதம் என்றாலும்  சுவையாய் இருக்கும்.

துவரம்பருப்புப்   போட்டுத் தாளிப்பதால் சாப்பிடும்போது கூடுதல்  சுவை கிடைக்கும்.

சூடாக  பரிமாறவும். உங்கள் அன்பை  அளவில்லாமல் கலந்து பரிமாறுங்கள். சுவை தூக்கலாகத் தெரியும் என்பதில் சந்தேகமேயில்லை.

இந்த ரெசிபியை  டிவி நிகழ்ச்சி ஒன்றில் பார்த்து விட்டு , செய்து பார்த்தேன் .
அதற்குக் கிடைத்த வரவேற்பு , என்னை அடிக்கடி செய்ய வைக்கிறது.


                                        Displaying IMG_1609.JPG

நீங்களும் முயன்று பாருங்களேன்.
வத்தக் குழம்பு  சாதத்திற்கு உங்கள் வீட்டில்  எப்படி வரவேற்பு என்பதைப் பற்றி தெரிவிக்க மறக்க வேண்டாம். 

Saturday, March 21, 2015

புட்டு

புட்டு  தமிழ் நாட்டின் பாரம்பர்ய  உணவு வகைகளில் ஒன்று . புட்டு என்றதும் பரமசிவனார் , வந்தியின்   பிட்டுக்கு மண் சுமந்த  கதை   நினைவில்  வந்து மோதுகிறது. . பிட்டுக்கு மண் சுமந்தக் கதையை  வேறொரு தளத்தில் எழுதுகிறேனே. இப்பொழுது புட்டு செய்முறையை சொல்கிறேன்.
அது புட்டு இல்லை பிட்டு  என்று சிலர் சொல்வது காதில் விழுகிறது.
புட்டு / பிட்டு எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள். அதன் செய்முறை இதோ .

அதற்குத் தேவையானவை :
  1. வறுத்த அரிசிமாவு/ இடியப்ப மாவு.--2 கப்
  2. வெல்லம் --அரை கிலோ ( உங்கள் ருசிக்கேற்ப கூட்டவோ  குறைக்கவோ செய்யலாம் )
  3. துருவியத் தேங்காய் ----1கப்.
  4. ஏலக்காய்--சிறிது.
  5. முந்திரி----சிறிது.
  6. நெய் -----இரண்டு ஸ்பூன் 




செய்முறை:
முதலில் வெல்லப் பாகு வைத்துக் கொள்வோம். வெல்லத்தை  உடைத்து  ஒரு பாத்திரத்தில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க  வைக்கவும். வெல்லம் கரைந்த பிறகு  கல், மண் நீக்க  வடிகட்டிக் கொள்ளவும். பிறகு திரும்பவும்  அடுப்பில் வெல்லப் பாகை வைத்து, துருவிய தேங்காயைப் போட்டு கொதிக்க வைக்கவும். வெல்லப்பாகு நன்கு கெட்டியாக  வரும் வரை அடுப்பில் இருக்கட்டும்.  வெல்லப் பாகை சிறிது எடுத்துக் கைகளால் உருட்டி தண்ணீரில் போட்டால் கரையாமல்  உருண்டு வரும். அது தான் சரியான பதம்.  ஏலக்காய் பொடி செய்துப் போட்டு இறக்கி வைத்துக் கொள்ளவும். பாகு அதிகமாய் இருந்தால் கவலைப் பட வேண்டாம். புட்டுக்கு வேண்டுமென்பதை உபயோகப்படுத்திக் கொண்டு மிச்சத்தை நாள் பட வைத்துக் கொண்டு  உப்யோகபடுத்திக் கொள்ளலாம். கெட்டிப் பாகாக இருப்பதால் கெட்டுப் போகாது.

 நான் இடியாப்ப மாவைக் கொண்டு புட்டு செய்திருக்கிறேன்.மாவை அகலமானப்  பாத்திரத்தில் போடவும்
தண்ணீரில் உப்பைக் கலந்து  சற்று கைப் பொறுக்கும் வரை  சூடு  செய்து கொள்ளவும்.  உப்புக் கலந்த வென்னீரை மாவில் கொட்டி, பொல பொல வெனப் பிசைந்து மூடி வைக்கவும். அரை மணி கழித்து  வெந்நீர் விட்டுப் பிசறிய மாவை  இட்லிப் பானையில் வைத்து  வேக வைக்கவும். பின்பு எடுத்து தட்டில் கொட்டி  ஆறிய பின் கட்டி இல்லாமல்  கையால் உதிர்த்துக் கொள்ளவும்.


 வெல்லப் பாகை எடுத்து  மாவில் கொட்டி  கலக்கவும். உங்கள் சுவைக்கேற்ப வெல்லப் பாகை சேர்த்துக் கொள்ளுங்கள். நெய்யை வாணலியில் விட்டு சூடு படுத்திக் கொள்ளவும். முந்திரி பருப்பை அதில் போட்டு சிவக்க வறுத்து, கலந்த புட்டில்  கொட்டவும்.

 விருப்பப்பட்டால் நெய் சேர்த்து  பரிமாறலாம்.

சுவையான புட்டுத் தயார்.


Saturday, January 31, 2015

முருங்கைக் கீரைப் பொடி

கீரை வகைகளிலேயே முருங்கைக் கீரைக்குத்  தனி மகத்துவம் உண்டு . ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றக் கீரை என்றுக் கூட சொல்லலாம். இணையத்தைத் துழாவினால்  இந்தக் கீரையின்  மகத்துவம் புரியும்.

சர்க்கரை வியாதியும், ரத்தக் கொதிப்பும்  முருங்கைக் கீரையின் முன் மண்டியிடும் என்று  மருத்துவக் குறிப்புகள் சொல்கின்றன. ஆனாலும் எல்லாக் கீரையைப் போல் இது சரளமாகக் கிடைப்பதில்லை.கிடைக்கும் போதும் வாங்கி, முருங்கைக் கீரையைக் கூட்டு செய்வது  வழக்கம்.  ஆனால் முருங்கைக் கீரையைப் பொடியாக செய்து வைத்துக் கொண்டால் தினமும் முருங்கைக் கீரை ஒரு ஸ்பூனாவது சேர்க்கும்  வாய்ப்புக் கிடைக்கும்.

எப்படி செய்வது பார்க்கலாமா?


         

 அதற்குத் தேவையானவை

  1.  தனியா ஒரு டம்ளர்.
  2.  சிவப்பு  மிளகாய்  ஒன்று அல்லது இரண்டு ( உங்கள் காரத்திற்கேற்பக்  கூட்டவோ, குறைக்கவோ  செய்யலாம்)
  3. பெருங்காயம் சிறிது.
  4.  முருங்கைக் கீரை  சுமார் இரண்டுக் கைப்பிடியளவு.( விரும்பினால் அதிகமாக்கிக் கொள்ளலாம்)
  5.  உப்பு தேவைக்கேற்ப .
  6.  எண்ணெய்  (வறுப்பதற்கு) ஒரு டீ ஸ்பூன் .

முருங்கைக் கீரையை  ஆய்ந்து , நன்கு சுத்தம் செய்து விட்டு,  நிழலில் நான்கைந்து நாட்களுக்கு உலர்த்தி  எடுத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை:

வாணலில் எண்ணெய் ஊற்றி சூடான பின்பு பெருங்காயம், மிளகாய், தனியா  எல்லாவற்றையும் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு வெறும் வாணலியில் உலர்ந்த முருங்கைக் கீரையைப்  போட்டு ( சில வினாடிகள் மட்டுமே) லேசாக வறுத்துக் கொள்ளவும்.

மிக்சியில் வறுத்த மிளகாய், தனியா , பெருங்காயம், உப்பு  போட்டு நன்குப் பொடி செய்துக் கொள்ளவும். அதனுடன் முருங்கைக் கீரையைப் போட்டு பொடியாக்கிக் கொள்ளவும்.


பொடியை எடுத்துப் பாட்டிலில்  வைத்துக் கொள்ளவும். சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.

பி.கு : தனியாவிற்குப் பதிலாக  துவரம் பருப்புப்  போட்டும்  முருங்கைக் கீரைப் பொடி செய்யலாம். 
தனியா வாசனைத் தூக்கலாக இருப்பதால், சற்றே  சுவைக் கூடுதலாக  இருக்கும் என்பது என்  அபிப்பிராயம்.

உங்கள் அபிப்பிராயத்தைத் தெரிந்துக் கொள்ள ஆவலாயிருக்கிறேன்.