Sunday, December 11, 2016

தக்காளி கொஜ்ஜூ

To read in English click here.
நேற்று  மதியம் டிவியை 'ஆன்' செய்து பார்த்தால்,ஒரு 'செஃப்' நிறைய தக்காளிகளை , சின்ன சின்னதாக நறுக்கிக் கொண்டிருந்தார். இவ்வளவு தக்காளிகளை  நறுக்கிக் கொண்டிருக்கிறாரே .....என்னதான் செய்யப் போகிறார் என்று ஆவலாகப் பார்க்கத் தொடங்கினேன்.

பேச்சு வாக்கில் அவர் செய்வது தக்காளி  கொஜ்ஜூ என்று புரிய வந்தது. செய்முறை எளிதாக இருக்கவே, நானும் ,அதை  உடனே செய்து பார்த்து விட்டேன்.  நன்றாகவே இருந்தது. அதையே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தயாரிப்பது   மிக எளிது . சுவையோ அபாரம் .

 எப்படி செய்யலாம் என்று பார்ப்போமே

தக்காளி கொஜ்ஜு செய்யத் தேவையாவை:

தக்காளி ---கால் கிலோ.
மஞ்சள் பொடி ---சிறிது.
மிளகாய்ப் பொடி/சாம்பார்பொடி ----- மூன்று ஸ்பூன்.
உப்பு-----தேவைக்கேற்ப.
உடைத்த வெல்லம்--- அரை கைப்பிடி .
தாளிக்க  எண்ணெய் --2 ஸ்பூன்
வெந்தயம்-----1 ஸ்பூன்.
பெருங்காயப்பொடி சிறிது.

செய்முறை:

தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியை கேஸில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடான பின்பு  கடுகு போடவும். கடுகு வெடிக்கும் போதே  வெந்தயம் போடவும்.  வெந்தயம் சிவந்தவுடன், நறுக்கிய தகாளிகளைப் போட்டு , உப்பு, மஞ்சள் தூள்,  மிளகாய் பொடி, வெல்லம், ஆகிய  எல்லாவற்றையும்  போட்டு நன்கு பிரட்டிவிடவும்.
பிறகு  கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி , கேசை  சிம்மில் வைத்து, தட்டால் மூடி விடவும்.  அவ்வப்பொழுது  கிளறி  விடவும். தக்காளி நன்கு வெந்த பிறகு , தட்டை எடுத்து விடவும். நன்கு சுருள வதக்கிக் கொள்ளவும்.

இட்லி, தோசை, சப்பாத்தி, ஏன் சாதத்திற்குக்  கூட இந்த  தக்காளி கொஜ்ஜு நல்ல தோழி. அபார ருசி இருக்கும் .



உங்கள் வீட்டில், தக்காளி கொஜ்ஜூவிற்கு வரவேற்பு எப்படி இருந்தது என்று எனக்கும் தெரிந்து கொள்ள ஆசை.

Friday, September 30, 2016

வெங்காய சட்னி

To read Onion Chutney in English click here.

வெங்காய சட்னி,  தோசைக்கு, இட்லிக்கு  ஏன் சப்பாத்திக்குக் கூட  தொட்டுக் கொள்ளலாம்.

எப்படி செய்யலாம் என்று பார்ப்போமா?

வெங்காயச்  சட்னி செய்யத் தேவையானவை:
  1. சாம்பார் வெங்காயம் ---5 அல்லது  6.
  2. ( சாம்பார் வெங்காயம் இல்லையெனில்  பெரிய வெங்காயம் ஒன்று எடுத்துக் கொள்ளலாம்.)
  3. சிவப்பு மிளகாய்--5 அல்லது 6
  4.  தக்காளிப் பழம்--- 2.
  5.  உப்பு--- தேவைக்கேற்ப 
  6. எண்ணெய்--1 ஸ்புன்.
  7.  கடுகு ---1/2 ஸ்பூன்  

 சட்னி செய்முறை :

 வெங்காயம்  உரித்து வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயமாயிருந்தால்  நான்காக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளியையும்  நான்காக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் , வாணலியில்  எண்ணெய்  ஊற்றி , சூடான பின், முதலில் சிவப்பு மிளகாயைப் போட்டு  வறுத்து எடுத்து வைத்துக்  கொள்ளவும். பிறகு வெங்காயம், தக்காளியைப் போட்டு  இரண்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும். (நன்கு வதக்கி விட வேண்டாம். சுவை மாறி விடும்.)

பிறகு வறுத்த மிளகாயை , உப்புடன் சேர்த்து  மிக்சியில் போட்டு நன்கு  பொடியாக்கிக் கொள்ளவும். அதற்குப் பிறகு வதக்கின வெங்காயம், தக்காளியைப் போட்டு  அரைக்கவும். (நான் மிகவும் நைசாக அரைப்பதில்லை).

கடுகு தாளிக்கவும்.

                                          




வெங்காய சட்னி ரெடி.

வதக்கின தக்காளிக்குப்  பதிலாக புளியை அப்படியே  உபயோகிக்கலாம்.

சட்னியைப் பரிமாறும் போது எல்லையற்ற அன்புடன் பரிமாறுங்கள். உங்களவர்  உங்களை வானளாவப் புகழ்ந்துத் தள்ளி விடுவார் .

சட்னியின் மகிமை எப்படியிருந்தது என்பதை எனக்கு சொல்ல மறக்க வேண்டாம்.

செய்யும் முறையை  வீடியோவில் பதிவு செய்துள்ளேன். இதோ உங்கள் பார்வைக்கு :




உங்களின் மேலான கருத்துக்களை  சொல்லுங்கள்.
வீடியோ பிடித்திருந்தால் ...'LIKE'  மற்றும்  ' SUBSCRIBE' பட்டன்களைத்  தட்டி விட்டு விடுங்கள்.

Sunday, August 14, 2016

தவலை வடை !


To read this recipe in English click here.
தவலை வடை செய்யத் தேவையானவை:


பச்சரிசி-2 டம்ளர்.
கட லைப்  பருப்பு- 3/4 டம்ளர்.
துவரம் பருப்பு--1/4 டம்ளர்
உளுத்தம் பருப்பு- ஒரு கைப்பிடி அளவு.
பெருங்காயம் -சிறிது.
சிவப்பு மிளகாய்-2.
மிளகு-1 ஸ்பூன் (ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்)
 கடுகு- 1 ஸ்பூன்
தேங்காய் பல்பல்லாக நறுக்கியது -2 அல்லது 3 ஸ்பூன்.
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை  சிறிது.
எண்ணெய் -  பொறிக்க.

பச்சரிசி,பருப்பு வகையறாக்கள் எல்லாவற்றையும் நான்கைந்து மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறிய பிறகு மிக்சியில் போட்டு, மிளகாய், உப்பு, பெருங்காயம்  சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவில் பெருங்காயம், மிளகுத் தூள் , நறுக்கியத் தேங்காய், கறிவேப்பிலைப் போட்டு கலந்து கொள்ளவும்.

                               


அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சிறிது  எண்ணெய் விட்டு சூடான பிறகு கடுகு போடவும்..வெடித்த கடுகை , அரைத்தது வைத்துள்ள மாவில் கொட்டவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி , சூடானதும், சின்னக் கரண்டியால் மாவை எடுத்து, எண்ணெயில்  சின்ன சின்ன வடைகளாக  ஊற்றவும்.
அவ்வப்பொழுது பிரட்டி விடவும், பொன்னிறமானதும்  எடுத்து விடவும்.

கடுகு, மிளகு, தேங்காய். கறிவேப்பிலை மணத்தத்துடன் தவலை  வடை மிக சுவையாக இருக்கும்.

வடையை, சட்னி, சாம்பாருடன் சாப்பிட சுவை கூடும்.







ஏன் இதற்குத் தவலை  வடை என்று பெயர் வந்தது ? உங்களுக்குத்  தெரியுமா?

என் பாட்டி , எண்ணெயில் வடையை பொறித்து எடுக்கவில்லை. ஒரு பெரிய தவலையை அடுப்பில் வைத்து,  அதன் உள்ளே அடிப்பாகம் , உள் சுவர் எல்லாம்  எண்ணெய் தடவி, அதன் மேல் மாவை, வடை வடையாக தட்டி ஒரு கனமான தட்டால்  மூடி , சின்னதாக எரியும் விறகடுப்பில் வைத்து விடுவார்கள்.
வடை நன்கு மொறுமொறுவென்று வெந்ததும் , தானாகவே  தவலையின் உள் சுவற்றிலிருந்து "பொத் பொத்" தென்று விழுந்து விடும். பிறகென்ன எடுத்து சுடச்சுட சாப்பிட வேண்டியது தான். இதற்கு எண்ணெய் தேவை மிக மிக சிறிதே.

அவ்வளவு ஆரோக்கியமான வடையை, இப்பொழுது எண்ணெயில் குளிக்க வைத்து வாய் கூசாமல்  தவலை வடை  என்று சொல்லிக் கொள்கிறோம்.
விறகடுப்பும் இல்லை, தவலையும் இல்லை, ஆனால் தவலைவடை  மட்டும் உண்டு.

அதெல்லாம் கிடக்கட்டும்....
நீங்கள்,..... உங்கள் சௌகர்யப்படி வடையை  செய்து கொள்ளுங்கள். சுவை எப்படி இருந்தது என்பதை மட்டும் எனக்குத் தெரியப்படுத்த மறக்காதீர்கள்!

Saturday, March 26, 2016

பூண்டு வெங்காயச் சட்னி

பூண்டு வெங்காயச் சட்னி,  தோசைக்கு, இட்லிக்கு  ஏன் சப்பாத்திக்குக் கூட  தொட்டுக் கொள்ளலாம்.

எப்படி செய்யலாம் என்று பார்ப்போமா?

பூண்டுவெங்காயச்  சட்னி செய்யத் தேவையானவை:



  1.  பூண்டு-- 5/6  பற்கள் 
  2. சாம்பார் வெங்காயம் ---5 அல்லது  6.
  3. ( சாம்பார் வெங்காயம் இல்லையெனில்  பெரிய வெங்காயம் ஒன்று எடுத்துக் கொள்ளலாம்.)
  4. சிவப்பு மிளகாய்--5 அல்லது 6
  5.  தக்காளிப் பழம்--- 2.
  6.  உப்பு--- தேவைக்கேற்ப 
  7. எண்ணெய்--1 ஸ்புன்.
  8.  கடுகு ---1/2 ஸ்பூன்  

 சட்னி செய்முறை :

பூண்டு , வெங்காயம்  உரித்து வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயமாயிருந்தால்  நான்காக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளியையும்  நான்காக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் , வாணலியில்  எண்ணெய்  ஊற்றி , சூடான பின், முதலில் சிவப்பு மிளகாயைப் போட்டு  வறுத்து எடுத்து வைத்துக்  கொள்ளவும். பிறகு பூண்டு, வெங்காயம், தக்காளியைப் போட்டு  இரண்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும். (நன்கு வதக்கி விட வேண்டாம். சுவை மாறி விடும்.)

பிறகு வறுத்த மிளகாயை , உப்புடன் சேர்த்து  மிக்சியில் போட்டு நன்கு  பொடியாக்கிக் கொள்ளவும். அதற்குப் பிறகு வதக்கின பூண்டு, வெங்காயம், தக்காளியைப் போட்டு  அரைக்கவும். (நான் மிகவும் நைசாக அரைப்பதில்லை).

கடுகு தாளிக்கவும்.



பூண்டு, வெங்காயம், சட்னி ரெடி.

வதக்கின தக்காளிக்குப்  பதிலாக புளியை அப்படியே  உபயோகிக்கலாம்.

சட்னியைப் பரிமாறும் போது எல்லையற்ற அன்புடன் பரிமாறுங்கள். உங்களவர்  உங்களை வானளாவப் புகழ்ந்துத் தள்ளி விடுவார் .

சட்னியின் மகிமை எப்படியிருந்தது என்பதை எனக்கு சொல்ல மறக்க வேண்டாம்.

Wednesday, January 6, 2016

நீர் கொழுக்கட்டை

நீர் கொழுக்கட்டை செய்வதற்கு தேவையானவை.:

1. புழுங்கலரிசி(இட்லி அரிசி) ஒரு ஆழாக்கு.
2. தேங்காய் பல் பல்லாக அரிந்தது ஒரு கையளவு.
3. உப்புத் தேவையான அளவு.


செய்முறை:

புழுங்கலரிசியை   ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும்.பிறகு, கிரைண்டரில் ,நன்கு  நைசாக  தோசைக்கு அரைப்பது போல் அரைத்து எடுத்துக்  கொள்ளவும். அரைக்கும் போதே  தேவையான  கல் உப்பைப் போட்டு  அரைத்துக் கொள்ளவும்.நன்கு அரைபட்டவுடன்  அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ,பல் பல்லாக அரிந்து வைத்துள்ள தேங்காயைப் போடவும். நன்கு கலந்து விடவும்.  இந்த மாவை சுத்தமான  வெள்ளைத் துணியில் போட்டு  மூடி வைக்கவும். பத்துப் பதினைந்து நிமிடங்களில் மாவில் இருக்கும் தண்ணீர்  குறைந்து, கையால் உருட்டும்  பக்குவத்திற்கு மாவு இருக்கும்.
இதை சின்ன சின்ன கொழுக்கட்டைகளால்  உருட்டி அதே துணியில்  போட்டு வைத்துக் கொள்ளவும்.

(கிரைண்டரில் அரைத்தால் மாவு உருட்டும் பதத்தில் இருக்காதே. நீர்க்க இருக்குமே என்று யோசிப்பவர்களுக்கு, "அதற்குத் தான் சுத்தமான வெள்ளைத்துணியில் போட்டு மூடி வைக்க வேண்டும். துணி  தண்ணீரை  இழுத்துக் கொள்ளும்.")

அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தில் முக்கால் பாத்திர அளவிற்குத் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதி வந்ததும். கொழுக்கட்டைகளில் ஒரு தட்டு அளவு எடுத்து அதில் போடவும்.

மாவு கரைந்து போய் விடும் என்று கவலைப் பட வேண்டாம். தண்ணீர் கொதித்திருப்பதால் கொழுக்கட்டைகள் கரையாது. அடுப்பை நிதானமாக எரிய விட்டு அவ்வப்பொழுது கிளறிக் கொண்டேயிருக்கவும். பத்து நிமிடம் கழிந்தப் பிறகு கரண்டியால்  வெந்தக் கொழுக்கட்டைகளை எடுத்து விடவும் . பிறகு மீதி இருக்கும் கொழுக்கட்டைகளையும்  இதே போல் வேக வைத்துக் கொள்ளவும்.

கொழுக்கட்டைகள்  வெந்ததா என்று  பார்க்க ஒரு சின்ன "டிப்"  . வெந்த கொழுக்கட்டைகளில் ஒன்றை எடுத்து தட்டில் போடவும். "நான் வெந்து விட்டேனே " என்று சொல்வது போல் ஒரு  துள்ளு துள்ளும். அது தான் வெந்து விட்டது என்பதற்கு  அத்தாட்சி.

ஏன் நாங்கள் வாயில் போட்டுக் கண்டு பிடித்துக் கொள்கிறோமே என்று கேட்பவர்களுக்கு தாராளமாக செய்து கொள்ளலாம்.  ஒவ்வொரு கொழுக்கட்டையாக வெந்து விட்டதா என்று பார்க்கிற சாக்கில்  எல்லாவற்றையும் தின்று தீர்த்து விடப் போகிறோமே என்று தான் சொன்னேன்.

எங்களுக்கு சிரிப்பு வரவில்லை என்று சொல்பவர்களுக்கு, பரவாயில்லை விடுங்கள் நானே சிரித்து  வைக்கிறேன்.   ஹா.....ஹா........




கொழுக்கட்டை  எப்படி இருந்தது? ருசி பார்த்தீர்களா என்பதற்கும் அவசியம் எனக்கு எழுதுங்கள்.