Wednesday, January 6, 2016

நீர் கொழுக்கட்டை

நீர் கொழுக்கட்டை செய்வதற்கு தேவையானவை.:

1. புழுங்கலரிசி(இட்லி அரிசி) ஒரு ஆழாக்கு.
2. தேங்காய் பல் பல்லாக அரிந்தது ஒரு கையளவு.
3. உப்புத் தேவையான அளவு.


செய்முறை:

புழுங்கலரிசியை   ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும்.பிறகு, கிரைண்டரில் ,நன்கு  நைசாக  தோசைக்கு அரைப்பது போல் அரைத்து எடுத்துக்  கொள்ளவும். அரைக்கும் போதே  தேவையான  கல் உப்பைப் போட்டு  அரைத்துக் கொள்ளவும்.நன்கு அரைபட்டவுடன்  அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ,பல் பல்லாக அரிந்து வைத்துள்ள தேங்காயைப் போடவும். நன்கு கலந்து விடவும்.  இந்த மாவை சுத்தமான  வெள்ளைத் துணியில் போட்டு  மூடி வைக்கவும். பத்துப் பதினைந்து நிமிடங்களில் மாவில் இருக்கும் தண்ணீர்  குறைந்து, கையால் உருட்டும்  பக்குவத்திற்கு மாவு இருக்கும்.
இதை சின்ன சின்ன கொழுக்கட்டைகளால்  உருட்டி அதே துணியில்  போட்டு வைத்துக் கொள்ளவும்.

(கிரைண்டரில் அரைத்தால் மாவு உருட்டும் பதத்தில் இருக்காதே. நீர்க்க இருக்குமே என்று யோசிப்பவர்களுக்கு, "அதற்குத் தான் சுத்தமான வெள்ளைத்துணியில் போட்டு மூடி வைக்க வேண்டும். துணி  தண்ணீரை  இழுத்துக் கொள்ளும்.")

அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தில் முக்கால் பாத்திர அளவிற்குத் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதி வந்ததும். கொழுக்கட்டைகளில் ஒரு தட்டு அளவு எடுத்து அதில் போடவும்.

மாவு கரைந்து போய் விடும் என்று கவலைப் பட வேண்டாம். தண்ணீர் கொதித்திருப்பதால் கொழுக்கட்டைகள் கரையாது. அடுப்பை நிதானமாக எரிய விட்டு அவ்வப்பொழுது கிளறிக் கொண்டேயிருக்கவும். பத்து நிமிடம் கழிந்தப் பிறகு கரண்டியால்  வெந்தக் கொழுக்கட்டைகளை எடுத்து விடவும் . பிறகு மீதி இருக்கும் கொழுக்கட்டைகளையும்  இதே போல் வேக வைத்துக் கொள்ளவும்.

கொழுக்கட்டைகள்  வெந்ததா என்று  பார்க்க ஒரு சின்ன "டிப்"  . வெந்த கொழுக்கட்டைகளில் ஒன்றை எடுத்து தட்டில் போடவும். "நான் வெந்து விட்டேனே " என்று சொல்வது போல் ஒரு  துள்ளு துள்ளும். அது தான் வெந்து விட்டது என்பதற்கு  அத்தாட்சி.

ஏன் நாங்கள் வாயில் போட்டுக் கண்டு பிடித்துக் கொள்கிறோமே என்று கேட்பவர்களுக்கு தாராளமாக செய்து கொள்ளலாம்.  ஒவ்வொரு கொழுக்கட்டையாக வெந்து விட்டதா என்று பார்க்கிற சாக்கில்  எல்லாவற்றையும் தின்று தீர்த்து விடப் போகிறோமே என்று தான் சொன்னேன்.

எங்களுக்கு சிரிப்பு வரவில்லை என்று சொல்பவர்களுக்கு, பரவாயில்லை விடுங்கள் நானே சிரித்து  வைக்கிறேன்.   ஹா.....ஹா........




கொழுக்கட்டை  எப்படி இருந்தது? ருசி பார்த்தீர்களா என்பதற்கும் அவசியம் எனக்கு எழுதுங்கள்.