Monday, December 29, 2014

வாழைக்காய் பொடி

வாழைக்காயை வைத்து, பஜ்ஜி , வறுவல் செய்திருப்பீர்கள் , கறி  செய்து இருப்பீர்கள், கூட்டு செய்து சாப்பிட்டிருப்பீர்கள் , குழம்பு கூட  செய்திருக்கலாம், ஏன் வாழைக்காய் சாம்பார் கூட செய்திருக்கலாம் தான்.
ஆனால்.......பொ.........டி..........
வாழைக்காய் பொடி   செய்து சாப்பிட்டிருக்கீறீர்களா?

இல்லையா ....

அப்படி என்றால் உங்களுக்குத் தான் இந்தப் பதிவு.

"அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்.நாங்கள் தான் செய்திருக்கிறோமே " என்று சொல்பவர்களா நீங்கள்  ? அப்படி என்றால் நான் சொல்லும் செய்முறை சரி தானா  என்று சொல்லுங்கள்.

வாழைக்காய் பொடி செய்யத் தேவையானவை :
  1. வாழைக்காய் -1 அல்லது 2 ( உங்கள் தேவைக்கேற்ப)
  2. உளுத்தம் பருப்பு -- 3 டீ  ஸ்பூன் 
  3. சிவப்பு மிளகாய் ---  2 ( உங்கள் காரத்திற்கேற்ப )
  4. உப்பு -----தேவைக்கேற்ப 
  5. பெருங்காயம் சிறிது.
  6. எண்ணெய்   1 டீ ஸ்புன் 



 செய்முறை :

முதலில் வாழைக்காயை  இரண்டாக படத்தில் உள்ளது போல் நறுக்கிக் கொள்ளவும். பின்பு   ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைக்காய்கள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைக்கவும். அதிகம் வெந்து விடக் கூடாது. ஒரு ஸ்பூன் நுனியால் மெதுவாக அமுக்கிப் பார்த்தால், ஸ்புன்  நுனி உள்ளே போகும். அது தான் சரியானப் பதம் அடுப்பில் இருந்து இறக்கி  தண்ணீரில் இருந்து எடுத்து ஆற வைக்கவும்.

ஆறியப்  பிறகு வாழைக்காய்களிளிருந்து தோலை உரித்து எடுத்து விடவும். கைகளால் லேசாக நசுக்கிக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்  ஊற்றி, பெருங்காயம், உளுத்தம் பருப்பு, மிளகாய்  எல்லாவற்றையும் போட்டு சிவக்க வறுக்கவும்.  ஆற வைக்கவும்.

மிக்சியில்  வறுத்த உளுத்தம்பருப்பு, மிளகாய், பெருங்காயம் , தேவையான உப்புப் போட்டு பொடி செய்துக் கொள்ளவும். நன்கு பொடியானதும், வேக வைத்து மசித்த வாழைக்காய்களை  மிக்சியில் போட்டு,  ஒரு சில வினாடிகள் மட்டுமே  whipper போட்டுக்  கொள்ளுங்கள் .

ஒரு ஸ்பூனால் நன்கு கலந்து பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட  சுவையோ சுவை தான்.சிறிது நல்லெண்ணெயுடன் பிசைந்து சாப்பிட சுவைக் கூடும்

சாப்பிட்டுப் பார்த்து சொல்லுங்கள்.





 பி.கு : இந்தப் பொடி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை :

வாழைக்காயை  அதிகம் வேக வைத்தாலோ, அல்லது மிக்சியில் மசித்த  வாழைக்காயைப் போட்டு அதிக வினாடிகள் சுற்றி விட்டாலோ  பொடியாக வராது. கூழாகி  விடும் .





No comments:

Post a Comment

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்