Tuesday, December 24, 2013

எண்ணெயில்லா எலுமிச்சை ஊறுகாய்

















இதற்குத் தேவையானது :

எலுமிச்சம் பழம்  10
சிவப்பு மிளகாய்   உங்கள்  ருசிக்கேற்ப
வெந்தயம்   இரண்டு  டீ ஸ்பூன் .
உப்பு  ருசிக்கேற்ப
மஞ்சள் தூள்  3 டீ ஸ்பூன் .
எண்ணெய் சிறிதளவு( மிளகாய், வெந்தயம் ,வறுக்க)

எலுமிச்சம் பழத்தை படத்தில் தெரிவது போல் நறுக்கிக் கொள்ளவும்.
நீங்கள் இன்னும் சிறிதாகவோ, கொஞ்சம் பெரிதாகவோ  விருப்பத்திற்கேற்ப
நறுக்கிக் கொள்ளலாம்.


ஒரு பாத்திரத்தில், இந்த எலுமிச்சை துண்டுகளில்  சிலவற்றை  இரண்டு விரல்களால் லேசாகப்  பிழிந்த மாதிரி போடவும். அப்பொழுது தான் நீங்கள் உப்பு போடும் போது , உப்பு சீக்கிரம்  கரையும்.


பிறகு உப்பும், மஞ்சள் தூளும் அதில் போட்டு, கரண்டியால் நன்கு  கலந்து விட்டு , அப்படியே மூடி வைக்கவும். தினம் ஒரு முறை பாத்திரத்தை நன்கு குலுக்கி விட்டு  மூடி வைக்கவும். இதே மாதிரி தினமும் குலுக்கி, ஒரு வாரத்திற்கு  வைத்திருக்கவும். வேண்டுமானால் வெயிலில் ஒரு சில மணி நேரம் வைக்கலாம். (ஆனால் கட்டாயமில்லை .)





ஒரு வாரம் கழித்து ,ஒரு ஸ்பூனால் அமுக்கிப் பார்த்தால் நன்கு அமுங்கும்.எலுமிச்சை  சாறு  தெரியும் .( மேலே  படத்தில் உள்ளது போல்)


இந்த சமயத்தில், வெந்தயம், மிளகாய்  இரண்டையும் எண்ணெயில் வறுத்து
மிக்சியில் பொடித்து வைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியை எலுமிச்சங்காய் மேல் தூவி  கரண்டியால் நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.



ருசித்துப் பார்த்து , தேவைப்பட்டால் உப்பும், இன்னும் கொஞ்சம் மிளகாய் தூளும் சேர்த்துக் கொள்ளலாம். உப்பு  கொஞ்சம் தூக்கலாக இருப்பது நலம். நாள் பட  உப்பின் சுவை தெரியாது. மேலும் உப்பு குறைவாக இருந்தால் ஊறுகாய் கெட்டு விடும் வாய்ப்புண்டு.





எலுமிச்சை ஊறுகாய்  ரெடி !!!

இதை கண்ணாடி பாட்டிலில் அல்லது பீங்கான் ஜாடியில்   எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

பிளாஸ்டிக்  பாட்டிலகளைத் தவிப்போமே!
புற்று  நோயை விரட்டுவோமே!

3 comments:

  1. எங்கம்மாவும் இப்படித்தான் முழு எலுமிச்சைகளில் செய்வாங்க. நான் வேகவச்சு செய்திடுவேன். தானாக ஊறினால் நல்லாத்தான் இருக்கும்.

    ஒரு சின்ன சந்தேகம், பழங்களை வெயிலில் வைக்காமல் இருந்தால் பூஞ்சணம் வந்திடாதா? கட்டாயமில்லைனு சொல்லியிருக்கீங்க. அதுக்கு பயந்துதான் இதுமாதிரி செய்வதில்லை. மார்க்கெட் கிளம்புறேன், வருகிறேன் எலுமிச்சம் பழங்களுடன்.

    ReplyDelete
    Replies
    1. பழங்களை வெயிலில் வைக்க வேண்டிய அவசியமில்லை. அதற்குத் தான் உப்பு கொஞ்சம் கூடுதலாக போட்டு விட்டால் கெடாது . அப்படியும் உங்களுக்கு சந்தேகமானால் பேசாமல் ஊறுகாய் போட்டு ஃபிரிட்ஜில் வைத்து விடுங்களேன். வருடமானாலும் கெடாது. அனுபவத்தில் சொல்கிறேன்.
      நன்றி சித்ரா என் பதிவைப் படித்து கருத்திட்டதற்கு.

      Delete
  2. எனக்கு நினைவிருக்கிறது அம்மம்மா எலுமிச்சைப்பழத்தை 6ஆகக் கீறி அதனுள் உப்பு அடைந்து வெயிலில் காயவிடுவார். அது தானாகவே பிரிந்து காய்ந்து விரியும் அதை எடுத்து ஒருபோத்தாலில் போட்டு திருப்ப ஒருபழத்துக்கு 4எலும்மிச்சம் பழச்சாற்றை விட்டு மூடிவிடுவார். ஒவ்வோருநாளும் எதைக் குலுக்கி விடுவார். இத்துடன் மஞ்சள் செத்தல்மிளகாய் வெந்தியம் மிளகு சிறிது பெருஞ்சீரகமமும் சேர்த்து வறுத்து அரைத்து கலவையுடன் கலந்து விடுவார். இது பலமாதங்களுகுக்கு அசையாமல் இருக்கும்

    ReplyDelete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்