Saturday, January 11, 2014

பாகற்காய் பிட்லே

பாகற்காய்  கசக்கும் ,எல்லோருக்கும் தெரியும். அதை கொஞ்சம் இனிப்பு கலந்து  செய்து கொடுப்போமே. எல்லோருக்கும் பிடிக்கும் பாருங்கள்.



தேவையானவை

பாகற்காய்  -- கால் கிலோ.
புளி ஒரு நெல்லிக்காயளவு.
மஞ்சள் பொடி. கால் ஸ்பூன் .
சாம்பார் பொடி  உங்கள் ருசிக்கேற்ப .
தேங்காய்  2 டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப .
வெல்லம் சிறிதளவு (இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன்  உடைத்த  வெல்லம்)
வறுக்க, தாளிக்க  சிறிதளவு எண்ணெய்.
தாளிக்க கடுகு.
கறிவேப்பிலை,கொத்தமல்லி  சிறிது.


வறுத்து அரைக்க :

பெருங்காயம் சிறிது.
தனியா இரண்டு டீஸ்பூன்
கடலை பருப்பு   இரண்டு டி ஸ்பூன்.
ப.அரிசி   இரண்டு டீஸ்பூன் .
சிவப்பு மிளகாய்  இரண்டு அல்லது மூன்று .

செய்முறை

பாகற்காயை  சிறிய துண்டுகளாக  நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு டீஸ்பூன்  எண்ணயை  வானலியில் ஊற்றி  , எண்ணெய்   காய்ந்ததும், பெருங்காயம் , போட்டு வறுத்து எடுக்கவும் . பின் அரிசி, கடலைபருப்பு, தனியா ,மிளகாய்  எல்லாவற்றையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஆறின பிறகு மிக்சியில் போட்டு தேங்காயையும் சேர்த்து , கொஞ்சமாய்  தண்ணீர் விட்டு  ,விழுதாக  அரைத்து வைக்கவும்.விழுதை ரொம்பவும் நைசாக அரைக்க வேண்டாம். ரொம்பவும் நைசாக அரைத்து விட்டால்  , பிட்ல 'கொழ கொழ 'என்றாகி விடும். கவனம் . முக்கால் வாசி அரைபட்டால் போதும் . அதற்காக ரொம்பவும் கொரகொரப்பாகவும் அரைக்க வேண்டாம்.

புளியை  தண்ணீரில் ஊற  வைக்கவும்.

வாணலியில் எண்ணெய்  ஊற்றிக்  காய்ந்தவுடன், கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள பாகற்காய் இரண்டையும் போட்டு  சிறிது நேரம் வதக்கவும். இரண்டு நிமிடங்கள் பிறகு   ஊற  வைத்த புளியைக் கரைத்து , பாகற்காயில் ஊற்றவும். புளி  கரைசல் சற்றே நீர்க்க இருத்தல் நலம்.
இப்பொழுது மஞ்சள் பொடி, மிளகாய் பொடி உப்பு எல்லாம் போடவும். சாம்பார் பொடி போடும் போது, நீங்கள் அரைத்து வைத்திருப்பதில் மிளகாயும் சேர்ந்திருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும். கொதி வந்தவுடன் சிம்மில் வைத்து மூடி விடவும். சிறிது நேரம் கழித்து பாகற்காய் வெந்தவுடன்,
அரைத்து வைத்த விழுதை ,  அதில் சேர்க்கவும்.. ஒரு கொதி வந்தவுடன்  ,
வெல்லத்தைப் போட்டு  கரைந்தவுடன் இறக்கி வைக்கவும்.
ருசி பார்க்கவும். வெல்லம், காரம் ,உப்பு  வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.அரைத்த விழுதைப் போட்டு அதிக நேரம் கொதித்தால் கொத்சு போல் ஆகிவிடும்.
கொத்தமல்லி தூவி  ,சுடசுட பரிமாறுங்கள். சாதத்தில் போட்டும் பிசைந்து சாப்பிடலாம்.
பரிமாறும் போது  அன்பையும், பாசத்தையும்  அளவில்லாமல் போட்டுப் பரிமாறுங்கள். ருசி  தூக்கலாக இருக்க நான் கியாரண்டி.

7 comments:

  1. அட! இந்த வலைத்தளம் எப்போது ஆரம்பித்தீர்கள், ராஜி? வாழ்த்துக்கள்!

    ருசி தூக்கலாக இருக்க நீங்கள் கொடுத்த கியாரண்டி அருமை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரஞ்சனி.. என் அம்மா மிக அருமையாக சமைப்பார். அவருடைய சமையல் குறிப்புகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சி. இது என் பிளாக் என்று சொல்வதை விடவும் என் அம்மாவின் பிளாக் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

      நான் கொடுத்த கியாரண்டியை ரசித்துப் படித்ததற்கு நன்றி ரஞ்சனி.

      Delete
  2. ம்ம்ம்....வரவர நீங்க தமிழ்ப்பட ஹீரோக்கள் மாதிரி ஆகிட்டீங்க. பன்ச் இல்லாமல் பதிவுகள் வருவதில்லை. முதலில் 'பன்ச்'சை படிச்சிட்டுதான் பதிவுக்கே வர்றேன்னா பார்த்துக்கோங்க. நல்லாருக்கு.

    பாவக்காய் புளிக்குழம்பு மாதிரி தெரியுதே. ஏன் 'பிட்லே'னு சொல்லணும்? காமாக்ஷிமா பதிவுகளில்கூட பார்த்திருக்கேன், அவங்களும் 'பிட்லை'னுதான் சொல்லி இருக்காங்க. ரொம்பநாள் சந்தேகம், தீர்த்து வையுங்கோ !! நான் வெல்லம் எதுவும் சேர்ப்பதில்லை. அதன் கசப்பு டேஸ்டில் சாப்பிடத்தான் பிடிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. என் பன்ச் வரியை ரசித்துப் படித்து வானளாவ புகழ்வதற்கு நன்றி சித்ரா. என்னால் உங்கள் சந்தேகத்தை தீர்த்து வைக்க முடியலையே .( சொக்கனைத் தான் கேட்க வேண்டும். ' சொக்கா......சொக்கா.........சொக்கன் இன்னும் வரவில்லையே... சித்ரா. எதற்கும் ஆயிரம் பொன்னை ரெடி பண்ணி வையுங்கள் .சொக்கன் வந்ததும் கேட்டு சொல்லிவிடுகிறேன்.)
      சும்மா ஜோக் தான் . கோபித்துக் கொள்ள வேண்டாம். எனக்கும் தெரியாது. பிட்லே என்று எல்லோரும் சொல்வது தான். ஏன் அந்தப் பேர் என்று தெரியவில்லை எனக்கும். இங்கு வந்து உங்கள் கருத்தை எழுதியதற்கு நன்றி சித்ரா.

      Delete
  3. இன்னொன்றையும் சொல்ல மறந்திட்டேன், 'அரட்டை'யில் மேலேயுள்ள 'அஞ்சரைப்பெட்டி'யைக் கிளிக்கினால் இந்தப்பக்கம் வருவதில்லை. என்னன்னு பாருங்கோ !!

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி சித்ரா. நீங்கள் சொன்னதும் தான் அங்கு போய் பார்த்து , சரி செய்து விட்டேன். நன்றி சித்ரா இந்த டெக்னிகல் பிரச்சினையை சொன்னதற்கு.

      Delete
  4. Raja akka, Tried the pitlai. I followed your instructions exactly. I am happy that I finally found the rusi of mami's pitlai. Thanks a lot for doing this.

    ReplyDelete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்